மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுக்கவில்லை-

maithriமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரதமர் வேட்பாளராக நியமிக்க கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள தேர்தலுக்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்குமான வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை இந்த வெள்ளிக்கிழமை 3ம் திகதி நிறைவுக்கு வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் தற்போது வேட்புமனு வழங்க நேர்முகப் பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுமந்திர கட்சி கூட்டணியில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட மாட்டார்கள். பிரதமர் வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் வெற்றிபெற்றால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கு அமைய பிரதமர் தெரிவு செய்யப்படுவார். முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள அல்லது அறிவிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்தி கட்சித் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்கவே வெளியேறினேன்-மைத்திரி-

maithriநவம்பர் 21ம் திகதி தொடக்கம் ஜனவரி 8ம் திகதிவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தன்னை ஒரு துரோகி என கவனித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தான் வெளியேறியமை 37 வருடங்களாக செய்யமுடியாத நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அதிகாரங்களை குறைக்கவே என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் தலைவர்கள் அதனை செய்யவில்லை எனினும் தனக்கு அதிகாரம் கிடைத்ததும் அதனை செய்து முடித்ததாக அவர் கூறியுள்ளார். 19வது திருத்தச் சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிக் கொண்டதாகவும் 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் சிக்கல் நிலை தோன்றியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எனவே எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெற்றாலும் 100 நாட்களில் தேர்தல் சட்டத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாணவர் அணி இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் தலதா அதுகோரவின் பிரதான ஆதரவாளர் கொலை-

talathaவெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரலவின் பிரதான ஆதரவாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளான நிலையில் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்வம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி, தேல, ஹெரகல்லேவத்த எனுமிடத்தில் நடைபெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான துஷார தேவாலேகம என்பவரே கொல்லப்பட்டுள்ளார். இவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோதே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகின்றது. இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸார் நுறியுள்ளனர். பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின் இடம்பெற்ற முதலாவது தேர்தல் கொலை இதுவாகும் என கபே கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

பாடசாலைகள் வாக்கெண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படமாட்டாது-

mahindaபொதுத் தேர்தலில் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களாக பாடசாலைகளை பயன்படுத்தாதிருக்க தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளார். கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் நிலையில், பொதுத் தேர்தல் இடம்பெற உள்ளமையே இதற்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார். வாக்களிக்கும் மத்திய நிலையங்களாக பாடசாலைகள் பயன்படுத்துவதால், வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக பாடசாலைகளை பயன்படுத்த முடியாது. அதனை ஒழுங்குபடுத்துவதற்கு அதிககாலம் எடுப்பதே அதற்கான காரணம். சாதாரணமாக வாக்களிப்பு மத்திய நிலையமாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக மாற்றியமைக்க குறைந்தது 5நாட்களேனும் செல்லும். இது பரீட்சை நடவடிக்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். கண்டி, கொழும்பு, பதுளை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்படுவதில் இந்த சிக்கல் அதிகளவில் தாக்கம் செலுத்தும். எவ்வாறாயினும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக பாடசாலைகளை பயன்படுத்தாமல் தவிர்த்துள்ள நிலையில் மாற்று வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது என அவர் மேலும் கூறியுள்ளார்.

நான்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பதவிநீக்கம்-

jailமட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து சிறைக்கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் நான்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து சிறைக்கைதி ஒருவர் கடந்த சனிக்கிழமை அதிகாலை தப்பியோடிய சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இவர்கள் நான்குபேரும் பதவிநீக்கம் செய்யப்பட்டதுடன் இச்சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி பொலன்னறுவை சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவிசாவளை கர்மாந்தபுர பகுதி என்றும் கேகாலை பன்னல்தெனிய டோலம்பிட்டிய என்றும் இருவேறு முகவரிகளைக் கொண்ட விதானலாகே டொம் ஒஸின் (வயது 35) என்கிற சிறைக்கைதி கடந்த 2007 டிசம்பர் மாதத்திலிருந்து தண்டனை அனுபவித்து வந்துள்ளார். இக்கைதி தப்பிச்சென்றுள்ள சம்பவத்திற்கும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் தொடர்பிருப்பதாக வெளியான தகவலையடுத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதற்கிணங்க இவர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.