பிரதேச செயலகங்களிலும் தேர்தல் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவு-

electionதேர்தல் முறைப்பாடு விசாரணைப் பிரிவுகளை, பிரதேச செயலகங்களிலும் ஸ்தாபிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. அந்தந்த மாவட்டங்களின் நிலைமைகளை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் தேர்தல் முறைப்பாடு விசாரணைப் பிரிவு நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார். பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அதிகாரிகளும் இந்தப் பிரிவில் கடமையாற்றவுள்ளனர். அத்துடன், மாவட்ட செயலகங்களிலும் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் தேர்தல் முறைப்பாடு விசாரணைப் பிரிவுகள் இயங்கவுள்ளன. வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர், குறித்த பகுதிகளில் நிலவும் நிலைமைகளை கருத்திற்கொண்டு பிரதேச செயலக மட்டத்தில் முறைப்பாட்டு பிரிவை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

காணாமல்போனோர் விவரங்கள் செப்டம்பரில் கையளிப்பு-

ajith pereraஇறுதிகட்டப் போரின்போது காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விவரங்களை இலங்கை அரசு, இரண்டு மாதங்களில் ஐ.நா சபையிடம் கையளிக்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதங்கள் நடைபெறவுள்ளன. அப்போது இலங்கை அரசாங்கம் சார்பில் அளிக்கப்படவுள்ள விளக்கங்களில், காணாமல் போனோர் தொடர்பான விபரங்களும் உள்ளடக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரேரா, தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையை அரசாங்கம் நன்றாக உணர்ந்துள்ளது. அப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது. இருப்பினும், இப்பிரச்சினைக்கு முடிவு காண்பதில் பல சிக்கல்கள் உள்ளன. அந்த தகவல்களை உடனடியாக வெளியிட முடியாமல் உள்ளது எனவும் பிரதியமைச்சர் கூறினார். இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் குறித்து மாறுபட்டத் தகவல்களும் உள்ளன. எவ்வாறாயினும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதத்தின்போது அரசு சில தகவல்களை வெளியிடும். இது தொடர்பான விபரங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமும் உள்ளன. தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் 250க்கும் குறைவான முன்னாள் புலி உறுப்பினர்களே உள்ளனர். அந்த பட்டியல், நீதி அமைச்சிடம் உள்ளது என பிரதி வெளிவிவவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

வவுனியா பொலிஸ் சோதனைப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்-

policeவவுனியா மாவட்ட காவல்துறை சோதனைப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இவர் பொலிஸாரின் விசேட விசாரணை பிரிவினரால் நேற்று முன்தினம் களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் முன்னிலை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இவ்வாறு விளக்கமறியல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேசத்தில் தங்கப் பொருட்கள் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதேசத்தை, வேறு சிலருடன் இணைந்து தோண்டியெடுத்ததாக இவர் மீது குற்றச் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை சேவையின் அவசியம் கருதி உடன் அமுலுக்குவரும் வகையில் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மூன்று பேருக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் அரசியல் கட்சிகள் சந்திப்பு-

mahindaஎதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் மஹி;ந்த தேசப்பிரிய மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நாளையதினம் மாலை தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. தேர்தல் வேட்பு மனு தாக்கல்கள் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பான ஏனைய செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது பேச்சு நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி வேட்புமனு தாக்கல்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில். நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இதுகுறித்து அரசா அதிபர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 4 பிரதிநிதிகள் வேட்புமனுத்தாக்கல் செய்யுமிடத்திற்கு செல்லமுடியும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்-

fishingதமிழகம் ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 27ம் திகதி ராமேசுவரத்தில் மீனவர் சங்க தலைவர் போஸ் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்களை எதிர்வரும் 1ம் திகதிக்குள் விடுவிக்க வேண்டும். அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு மீன்பிடி டோக்கன் வழங்க கூடாது என்றும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி ராமேசுவரத்தில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதில் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தேர்தலில் போட்டியிட்டு புதிய அரசாங்கத்தை அமைப்பேன்-மகிந்த-

mahindaஎதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு புதிய அரசாங்கத்தை அமைப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலை மெதமுலன்னவில் இடம்பெற்ற விசேட நிகழ்விலேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் சுதந்திரக்கட்சியின் முன்னாள் எம்.பி.க்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் உட்பட ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாட்டை மீண்டும் பொறுப்பேற்குமாறு சகலரும் விடுத்த கோரிக்கையை நான் நிராகரிக்கமாட்டேன். நாட்டுக்காகவும் தாய் மண்ணுக்காகவும் பொதுத்தேர்தலில் நான் போட்டியிடவேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை நான் பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்கின்றேன். அந்த அடிப்படையில் பொதுத் தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹாவில் சந்திரிகா போட்டி, கேகாலையில் ருக்மன் போட்டி-

chandrikarukmalபொதுத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் செயலாளர் பி.திஸாநாயக்க, சந்திரிகா, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வெளியாகியுள்ள ஊடக செய்திகள் உண்மையானது என்றும் அவர், கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார். அவர், ஐக்கிய தேசியக்கட்சியின் தெரணியகலை அமைப்பாளராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். 1997ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலும் ருக்மன் சேனாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளதுடன் அவர், முன்னாள் பிரதமர் டி.எஸ் சேனாநாயக்கவின் புதல்வராவார்.

விநாயகபுரத்தில் வீடு தீக்கிரை-

5555மட்டக்ளப்பு வாழைச்சேனை விநாயகபுரத்தில் வீடு ஒன்று முற்றாக தீக்கிரையாகி உடமைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. விநாயகபுரம், தாமரைக்கேணி மூன்றாம் குறுக்கு வீதியில் வசிக்கும் கூலி தொழில் செய்யும், பத்மராஜ் டினேஸ் (21) என்பவரின் குடிசை வீடே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. தானும் மனைவி மற்றும் நான்கு மாத குழந்தையுடன் பேத்தாழை மாவடி மாரியம்மன் ஆலயத்திற்கு இரவு சென்று விட்டு பின் அதிகாலை வீடு திரும்பிய போது வீடு தீக்கிரையாகி அனைத்து உடமைகளும் சேதமடைந்து காணப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் ப.டினேஸ் தெரிவித்துள்ளார். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

படகுமூலம் இந்தியா சென்றவர் கைது-

boatஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு அகதியாக சென்றவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த நபருடன் சென்று தப்பியோடிய மற்றொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இது பற்றி அறிந்து பொலிசாரும், கரையோர காவல்படையும் தேடுதல் நடத்தியபோது தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல்முனை செல்லும் வழியில் மணல் திட்டுகளுக்கு இடையே பதுங்கியிருந்த இலங்கை நபர் ஒருவர் நேற்றுக்காலை பிடிபட்டார். அவருடன் இருந்த மற்றொரு நபர், தப்பி விட்டதாக கூறப்படுகிறது. பிடிபட்ட நபர், மன்னார் உயிலங்குளம் கோயில் வீதியைச் சேர்ந்த சிவநாதன் கிறிஸ்டி (25) என தெரியந்துள்ளது. அவர் நேற்று முன்தினம் இரவு தலைமன்னாரில் இருந்து படகில் புறப்பட்டதாகவும், நேற்று அதிகாலை 4 மணிக்கு அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்திறங்கியதாகவும், படகு கட்டணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். படகில் தன்னுடன் வேறு சிலரும் வந்ததாகவும் கூறியுள்ளார்.