வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர்க்கு உதவி-(படங்கள் இணைப்பு)
முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்ற பயனாளிகளின் அவசியத் தேவையினைக் கருத்திற்கொண்டு வவுனியா, உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் இதற்கான நிதியுதவியினை வழங்கி பயனாளிகளுக்கான மெத்தைகளைப் பெற்றுக்கொடுக்க உதவியுள்ளனர். இதன்படி நேற்றையதினம் 17 பயனாளிகளுக்கு 56,100 ரூபாய் நிதியுதவியில் மெத்தைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர் அமைப்பின் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்ற பயனாளிகள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து சமூகத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் உயிரிழை முள்ளந்தண்டு பாதிப்புற்றோர் அமைப்பு இவர்களின் குறிப்பிட்ட தேவையினை செய்து வருகின்றது. இதன்படி இந்த அமைப்பினர் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் இவர்களது அடிப்படை தேவைகள் குறித்து கதைத்திருந்தனர். அதாவது, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு உணர்விழப்போடு வாழ்கின்ற பயனாளிகளுக்கு மெத்தை இன்றியமையாதது என்றும் மெத்தை இன்றி இவர்களால் இருக்கவோ உறங்கவோ முடியாதநிலை உள்ளது என்றும் கூறி மெத்தையின் தேவையினை எடுத்துக் கூறியிருந்தது. இதற்கமையவே வட்டுக்கோட்டை இந்து வலிபர் சங்கம் உதவி வழங்கியுள்ளது.