மைத்திரி கொலை முயற்சி தொடர்பில் சந்தேகநபருக்கு கடூழிய சிறை-

courtஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் புலிகள் அமைப்பின் உறுப்பினருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, பொலநறுவை மேல்நீதிமன்ற நீதிபதி அமின்டர் செனவிரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே நீதிபதி, இவ்வாறு தீர்ப்பளித்தார். 2005. 2006ம் ஆண்டு காலப்பகுதியிலேயே இக்கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொஹமது சுல்தான் காதர் மொஹிடீன் ஏ.கே.ஏ. சேனன் என்றழைக்கப்படும் சிவராஜ் ஜெனிவன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 ஆயிரம் ஷரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டபணத்தை செலுத்த தவறின் மேலதிகமாக ஒருவருடம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கிளைமோர் குண்டை வைத்து இக்கொலை முயற்சியை மேற்கொண்டதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 37 வயதான சந்தேகநபர், யாழ்ப்பாணம் கோவிலடி பகுதியை சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது.

மகிந்தவுக்கு வேட்புமனு வழங்கத் தீர்மானம்-

mahindaஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்புமனு வழங்கத் தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சாதாரணமாக எம்.பி. பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட தயார் இல்லை என தெரிவிக்கும் வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடலாம் என்ற சுசில் பிரேமஜயந்தவின் அறிவிப்பை நிராகரிப்பதாகவும், தாம் புதிய கூட்டணி அமைத்து மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவ வேட்பாளராக களமிறக்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையில் 108 அம்புலன்ஸ் சேவை அறிமுகம்-

ambulanceஇந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 108 அம்புலன்ஸ் சேவை இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அம்புலன்ஸ் சேவை இலங்கையில் செயல்படுவதற்கான நிதி உதவியையும் இந்தியா அளிக்கவுள்ளது. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்புலன்ஸ் சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்த இந்தியாவிடம் உதவியை நாடியிருந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச்சில் இலங்கை வந்திருந்தபோது இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதன்படி ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் இலங்கையிலும் 108 அம்புலன்ஸ் சேவையை அளிக்கவுள்ளது. இது குறித்து ஜிவிகே இஎம்ஆர்ஐ அதிகாரிகள் கூறுகையில், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இலங்கையில் அம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி இச் சேவையைத் தொடங்குவதற்காக இந்திய அரசு இலங்கைக்கு ரூ.50.81 கோடி நிதி உதவி அளிக்கவுள்ளது. முதற்கட்டமாக இலங்கையின் வட, தென் பகுதியில் 88 அம்புலன்ஸ் வாகனங்களுடன் இந்தச் சேவை தொடங்கப்படவுள்ளது. அம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற 600 ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அம்புலன்ஸ் சேவையைத் தொடர்பு கொள்ள இந்தியாவில் பயன்படுத்தப்படும் 108 என்ற எண்தான் இலங்கையிலும் பயன்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இ.தொ.காங்கிரஸ் ஐ.ம.சு.முன்னணியில் இணைந்து போட்டி-

cwcஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதென. இதொகா தலைவர் முத்து சிவலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த பத்தாண்டுகளாகவே தமது கட்சி அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து, இணைந்து போட்டியிட்டு, அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ளது என்றும் அது இந்தத் தேர்தலிலும் தொடரவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். எனினும் கண்டி, பதுளை மற்றும் மாத்தளைப் பகுதிகளில் தனித்துப் போட்டியிடும் எண்ணமும் தங்களுக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் தேர்தலில் வெற்றி வாய்ப்புகளை மனதில் வைத்தே கூட்டமைப்புடன் இணைந்தும், சில இடங்களில் தனியாகப் போட்டியிடுவது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை மலையகப் பகுதியில் செயல்படும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே தளத்தில் இணைந்து போட்டியிடுவது சாத்தியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி-

accidentமன்னார் – இலுப்பைக்கடவை பிரதான வீதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில்; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மரணமடைந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டனர். பின்னர், குழந்தையொன்று மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகள் மற்றும் மகளின் பிள்ளை ஆகியோர் மடுத் திருத்தல ஆடித் திருவிழாவுக்கு சென்றுவிட்டு யாழ்; நோக்கி முச்சக்கரவண்டியில் சென்றுள்ளனர். இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியும் மன்னார் நோக்கி பயணித்த வானும் மோதியதாக பொலிஸார் கூறியுள்ளார்.

பதிவுத் தபால்களை விநியோகிக்க விசேட திட்டம்-

postகொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தில் பதிவுத் தபால்கள் தேங்கிக் கிடப்பதை தவிர்ப்பதற்காக விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கடிதங்களை வகைப்படுத்துவதற்காக மேலதிக உத்தியோகத்தர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன குறிப்பிடுகின்றார். மத்திய தபால் பரிமாற்றத்தில் நாளாந்தம் சுமார் ஒரு இலட்சம் பதிவுத் தபால்கள் சேர்வதாகவும் தபால் மாஅதிபர் சுட்டிக்காட்டினார். இதனால் கொழும்பிலுள்ள தபால் அலுவலகங்களில் சேர்கின்ற பதிவுத் தபால்களை மத்திய தபால் பரிமாற்றத்திற்கு அனுப்பாது, அந்தந்த தபால் அலுவலகங்களுக்கே நேரடியாக அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தபால் மாஅதிபர் கூறினார். குறிப்பாக பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்தல், பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்க்க விண்ணப்பித்தல் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பப்படும் கடிதங்கள் காரணமாகவே கொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தில் கடிதங்கள் தேங்கி நிற்கின்றன என்றார் அவர்.

தபால் மூலம் வாக்களிப்புக்கு விண்ணப்பம்-

postal_votes_2எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகம்மட் அறிவித்துள்ளார். 2014ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் இத்தேர்தல் நடத்தப்படவுள்ளதால் தகுதியான அரசாங்க ஊழியர்கள் தபால் மூலம்; வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு எதிர்வரும் 14ம் திகதிவரை அனுப்பிவைக்க முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதேவேளை தபால் மூலம் வாக்களிக்கும் அரசாங்க ஊழியர்களின் நன்மை கருதி இன்றுமுதல் சகல மாவட்ட செயலகங்கள் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் அலுவலகங்களில் வாக்காளர் இடாப்புக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை உரிய இடங்களுக்குச் சென்று பார்வையிட முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இத் தகவல்களை பெறத்தவறுகின்றவர்கள் தேர்தல் செயலகத்தின் இணையத்தளத்தினை பிரயோகித்து பதிவுசெய்யப்பட்டுள்ள மாவட்டம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் எனபனவற்றினை உட்பிரயோகிப்பதன் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டி-

SLMCஎதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி விரைவில் ஐக்கிய தேசிய கட்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையை ஒரேநாள் சேவைக் கட்டணம் அதிகரிப்பு-

NICதேசிய அடையாள அட்டை ஒருநாளில் பெற்றுக்கொள்ளும் சேவைக்காக அறவிடப்படும் கட்டணம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இந்த சேவைக்காக அறவிடப்படும் கட்டணம் 500 ஷரூபாவிலிருந்து 1000 ஷரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு நேற்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.