மக்களின் ஆணையை ஒருபோதும் மீறப்போவதில்லை-ஜனாதிபதி-
ஜனவரி மாதம் 8ஆம் திகதி மக்களினால் வழங்கப்பட்ட ஆணையை ஒருபோதும் மீறப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தெற்கு அதிவேக வீதியின் கொடகம முதல் ஹம்பாந்தோட்டை வரையான வீதியை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 49 வருட அரசியல் அனுபவத்தைத் தான் கொண்டுள்ளதாகவும், திடீரென அரசியலுக்குள் பிரவேசிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் தன்னால் எடுக்கப்படுகின்ற முடிவுகள் அனைத்தும் மிகத் தெளிவாக எடுக்கப்படுவதாகவும் ஜனவரி 8ம் திகதி ஏற்பட்ட மாற்றத்தை பாதுகாப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
யாழ். மாணவன் கடத்தல் தொடர்பில் மூவர் கைது-
யாழ் நகரிலுள்ள ஒரு பிரபல பாடசாலையில் தரம் 1ல் கல்வி பயிலும் மாணவனை ஆட்டோவில் கடத்த முற்பட்ட மூவரை யாழ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ். குருநகரைச் சேர்ந்த குறித்த பாடசாலை மாணவனின் சகோதரியின் கணவன் மற்றும் அவரது நண்பர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவன் நேற்று பாடசாலை முடிவடைந்த பின் நண்பர்களுடன் பற்றிக்ஸ் வீதி வழியாக வீடு சென்றுகொண்டிருந்தபோது அவ்வீதியில் ஆட்டோவில் நின்ற 3 இளைஞர்கள் பாடசாலை மாணவனை கடத்தி ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர். ஆட்டோவின் இலக்கத்தை அவதானித்த மாணவனின் நண்பர்கள் பாடசாலை அதிபருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பாடசாலை அதிபர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம், ஆட்டோவை பொலிஸார் மடக்கிப்பிடித்து மாணவனை மீட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரையும் யாழ். பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் பின்னர் மூவரையும்; தடுத்து வைத்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி யானைச் சின்னத்திலேயே போட்டி-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறான கூட்டணி அமைத்தாலும், ஐக்கிய தேசிய கட்சி தமது யானை சின்னத்திலேயே போட்டியிடும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் பல்வேறு சிறு கட்சிகள் இணைந்துள்ளன. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடவிருப்பதாக கூறப்படுகின்றது. அத்துடன் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும் ஐக்கிய தேசிய கட்சியுடனேயே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இவ்வாறான கட்சிகளுக்கு இடையில் தொகுதி பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
பொலிஸ் பிரிவுகளில் தேர்தல் அலுவலகங்கள் அமைப்பு-
எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து, அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்குள்ளும் தேர்தல் நடவடிக்கை அலுவலகம் ஒவ்வொன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றிருந்த ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொலிஸ் தலைமையகத்தை மையப்படுத்தி, தேர்தல் செயலக அலுவலகம் ஒன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த ஊடக சந்திப்பின்போது, தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகளுக்கு என்ன நடக்கம் என்று கேள்வி எழுப்பப்ட்டது. இதற்கு பதில் வழங்கிய காவற்துறை ஊடகப் பேச்சாளர், இந்த விசாரணைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டி-
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடவுள்ளதாக, கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கடந்த 200 வருடகால மலையக மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படாத நிலையில், அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் விடுத்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மலையகத்தில் லயன் அறைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. போக்குவரத்து நடவடிக்கைகள் சீர்கெட்டுள்ளன. நாடு சுதந்திரமடைந்து, 65 வருடங்கள் கடந்துள்ள போதிலும், மாறி மாறி வந்த கட்சிகளினால் மலையக மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அனைத்து தோட்டங்களிலும் உள்ள பாதைகள் சீர்செய்யப்படும், மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படும், இளைஞர்களுக்கு படிப்பிற்கேற்ற அரச வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. சமூக அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துக் கொண்டு தேர்தல் களத்தில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக கூட்டணி குறிப்பிட்டுள்ளது,
யாழ். மாணவிகள் துஷ்பிரயோகம்: ஓய்வுபெற்ற அதிபருக்கு விளக்கமறியல்-
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் ஐவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதான ஓய்வுபெற்ற அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பருத்தித்துறை நீதவான் ம.கணேசராசா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இலங்கை தொடர்பில் மேலும் அவதானம்-
சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சில இலங்கை தொடர்பான கடிதம் ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளன. இலங்கை தொடர்பில் மேலும் அவதானத்துடன் செயயற்படுமாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பாக சாதகமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், அதனை தொடர்ந்து செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஷேடமாக கடந்த ஆட்சியின்போது இலங்கையில் மனித உரிமை செயற்பாடுகள் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தற்போதைய அரசாங்கம் மனித உரிமை நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் பல சவால்களை எதிர்கொள்வதாகவும் அதில மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேகப் பாதை நிர்மாணம்-
தெற்கு அதிவேகப் பாதையின் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான பகுதியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் ஆகியோர் இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். 4.5 பில்லியன் செலவில் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான 75 கி.மீ பகுதி பாதையே நிர்மாணிக்கப்பட இருக்கின்றன. இந்த அதிவேகப் பாதையை நிர்மாணிப்பதற்கான நிதியுதவியை சீன அரசாங்கம் வழங்கியுள்ளது.
மலையக சமுதாயத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த ஒன்றிணைவோம்-
தமிழர் விடுதலைக் கூட்டணி நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது. 200 வருடகால மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தில் வெள்ளைக் காரர்கள் கட்டிய அதே லயத்து வாழ்க்கையிலும் வெள்ளைக்காரர்கள் போட்ட அதே வீதிகள் இன்று குன்றும் குழியுமாக மாறியுள்ள நிலையிலுமே அவர்களின் வாழ்க்கைச் சக்கரம் ஓடிக் கொண்டிருக்கின்றது.
அன்று கட்டிய லயன் வீடுகள் இடிந்து விழும் நிலைக்கு வந்து விட்டன. அன்று போட்ட வீதிகளில் மக்கள் நடப்பதற்கே சிரமமாக இருக்கின்றது. அதனால் போக்குவரத்து ஒழுங்குகள் சீர்கெட்டு வாகனங்களில் பயணிப்பது எமதர்மராஜனை ஒரு தடைவை சந்தித்துவிட்டு வருவது போலுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி எப்படி முன்னேறும். அழகாக பாடசாலைக் கட்டிடங்களை கட்டி விட்டு, புதிதாக ஆசிரியர் நியமனங்களையும் கொடுத்துவிட்டு மாணவர்கள் படிக்கவில்லையே என்றால் எப்படி? அவர்களுக்கு ஒழுங்கான போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
பாதி நேரம் அவர்களின் போக்கு வரத்துக்காகவே போய்விடும். மீதி நேரம் அவர்கள் களைத்துப்போய் நித்திரை கொள்ளவே சரியாகிவிடும். அந்த வீதிகளில் அவசரத்தில்; வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகளின் நிலைமை அதோகதிதான். கொழும்பில் எவ்வளவு பஸ் போக்குவரத்து வசதிகள் இருந்தும் மிகவும் பிரபல்யமான பாடசாலைகளுக்குக்கூட இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகள் மாணவர்களை பாடசாலை வாசலுக்கே வந்து எற்றி இறக்கி விடுகின்றன.
ஆங்கிலேயர்கள் போய் கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆட்சிகள் மாறி மாறி வந்தன. காட்சிகளும் மாறின. அமைச்சர்கள் வந்தார்கள் போனார்கள் பிரதேசசபைகள், மாகாணசபைகள் என மாற்றங்கள் எல்லாம் நன்றாகவே நடந்தன. ஆனால் பாவம் அந்த மக்களிடம்தான் எந்த மாற்றமும் நடக்கவில்லை. லயன் வீட்டில்தான் பிறந்தோம் மாற்றிக் காட்டுகின்றோம் என்று ஒரு சிலர் பாராளுமன்றம் சென்றார்கள். ஆனால் வசதி வாய்ப்பு என பாராளுமன்றம் போய் தங்களை மாற்றிக் கொண்டார்களே தவிர, மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில், பள்ளிக்கு செல்ல வேண்டிய சிறுமிகளும், படித்துவிட்டு படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் இளம் பெண்களும், யுவதிகளும் வீட்டு வேலைகளுக்கு செல்லும் அவலம் தொடர்கதையாகவே இருக்கின்றது. அவர்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்புகள் ஏன் எற்படுத்தி கொடுக்கப்படவில்லை? யாரை குற்றம் சொல்வது?
எனவே இவற்றுக்கெல்லாம் ஒரு தீர்வு காணப்படவேண்டும். அதுமட்டுமல்ல நிபந்தனையற்ற சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு அரச வேலைவாய்ப்புக்கள் கிடைக்க வழிவகை செய்யப்படவேண்டும்.
எனவே நுவரெலிய மாவட்டத்தில் உள்ள சமூக அக்கறையுள்ள அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து தேர்தல் களத்தில் இறங்க தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானித்துள்ளது. எமது மக்களின் வாழ்வில் உண்மையான மாற்றத்தினை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஒன்றிணைந்து செயற்படுவோம்.
அனைத்து தோட்டங்களிலும் உள்ள பாதைகள் சீர்செய்யப்படும்
மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படும்
பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
படிப்பிற்கேற்ற அரசு வேலைவாய்ப்புகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்
உண்மையான இலவசக் கல்வியை உறுதிப்படுத்தி மாணவர்களின் கல்வித் தரம் உயர்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும். கல்வியில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்திக் காட்டுவோம்.
எம்முடன் இணைந்து போட்டியிட விரும்பும் எமது மலையக சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைத்து தரப்பினரையும் வரவேற்பதோடு பின்வரும் தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தொலைபேசி இலக்கம் : 077 2255639
இரா. சங்கையா,
நிர்வாகச் செயலாளர்- த.வி.கூ.