தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பற்றிய கலந்துரையாடல்-

tna (4)வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்து போட்டியிடவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அதன் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் முடிவுகளை எடுக்கும் கலந்துரையாடலில் இன்றையதினம் ஈடுபட்டுள்ளது. வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இன் விருந்தினர் விடுதியில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இக்கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவ்வாறான வியூகங்களை வகுத்து தேர்தலுக்கு முகங்கொடுப்பது மற்றும் கூட்டமைப்பு கட்சிகள் ஒற்றுமையாக எவ்வாறு பிரசாரங்களை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மட்டு. 04 சுயேட்சைகள் கட்டுப்பணம், தேர்தல் தொடர்பில் 12 முறைப்பாடுகள்-

money paidஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று நண்பகல் வரை நான்கு சுயேற்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட தேர்தல்கள் செயலக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 உறுப்பினர்களை தெரிவு செய்ய பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன தலா ஒரு ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன. இதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மேற்படி 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.