தபால் மூல வாக்களிப்பு தினம் அறிவிப்பு-
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை 3 நாட்களுக்கு முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதன்படி ஆசிரியர்களுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட் 3ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது. ஏனைய அரச நிறுவனங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ளது. தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். தபால் மூலமான வாக்களிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 2014ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை அலுவலகங்களின் தொலைபேசி இலக்கங்களின் மூலமோ கையடக்க தொலைபேசி இலக்கங்களின் மூலமோ அறிந்துகொள்ள முடியும் என தேர்தல் ஆணையாளர் சார்பாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ. அமரதாச தெரிவித்தார். அலுவலக தொலைபேசி இலக்கங்கள் – 0112868441, 0112868442, 0112868443 கையடக்க தொலைபேசி இலக்கங்கள்- 0710317117, 0717346030, 0710317112, 0717346084, 0717346423, 0717346436, 0717346373
யாழில் இதுவரை ஆறு அரசியல் கட்சிகள் விண்ணப்பம்-
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்றுவரை ஆறு அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்றுள்ளதுடன் மேலும், இரு சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளதாக யாழ்.மாவட்ட உதவி தேர்தல் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஓகஸ்ட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்யும் கால எல்லை எதிர்வரும் 13ஆம் திகதி நண்பகலுடன் முடிவடைகின்றது. இந்நிலையில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஆறு அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்பபடிவங்களை உதவி தேர்தல் ஆணையாளர் பணிமையில் பெற்றுள்ளனர். எனினும் ஒரு அரசியல் கட்சியே இன்றுவரையான காலப்பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இதேவேளை, வேட்புமனு தாக்கல் கடந்த 06ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய மாகாண சபை உறுப்பினர் கைது-
முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேல்மாகாண சபை உறுப்பினர் துஷார பெரேரா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விபத்து ஒன்று தொடர்பிலேயே அவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி விமானநிலைய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி சந்தேகநபரான துஷாரவின் வாகனத்தை சோதனையிட்டபோது, அதிலிருந்து துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இன்றுபகல் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ் நீதிமன்றத் தாக்குதல் தொடர்பில் மற்றுமொருவருக்கு விளக்கமறியல்-
யாழ். நீதிமன்ற கட்டடத்தின்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட மேலுமொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் ஏழாலை வடக்கு பகுதியில் வசிக்கும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. வீடியோ ஆதாரங்களுடன் குறித்த சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதாக யாழ் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதற்கமைய இவரை எதிர்வரும் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, நீதிமன்ற தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள 37 சந்தேகநபர்கள் எதிர்வரும் 10ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
புலிகளால் ஆபத்து இல்லையென தமிழக அரசாங்கம் அறிக்கை-
முல்லைப்பெரியார் அணைக்கு புலிகளால் ஆபத்து இல்லை என தமிழக அரசாங்கம் இந்திய உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த அணையின் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் இடம்பெறலாம் என கடந்தவாரம் தமிழக அரசாங்கம், தேசிய புலனாய்வு அறிக்கையை ஆதாரம் காட்டி சத்தியக் கடதாசிஒன்றை உயரநீதிமன்றில் சமர்ப்பித்திருந்தது. அதில் விடுதலைப்புலிகளின் பெயரையும் புலனாய்வுத்துறை இணைந்திருந்தது. எனினும் இதனை தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன. இந்நிலையில் நேற்றையதினம் தமிழக அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.
கொடிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் அறிவுறுத்தல்-
பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளின் போது, தேசிய கொடிகள், மதம் சார்ந்த கொடிகள், மாகாண கொடிகள் மற்றும் பாடசாலை கொடிகளை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். அரசியல் கூட்டங்கள் நடத்தப்படுவதானால் கட்சியின் கொடியை மாத்திரம் பயன்படுத்துமாறு ஆணையாளர் கடிதம் மூலம் கட்சிகளுக்கு அறிவித்துள்ளார். இதனிடையே, பொதுத் தேர்லுடன் தொடர்பான வேட்பு மனு தாக்கல் செய்யும் மூன்றாவது தினம் இன்றாகும். நேற்றை தினம் வரையில் 61 சுயாதீன குழுக்கள் கட்டுப்பனங்களை செலுத்தியுள்ளன. அதுபோல் இரண்டு கட்சிகளும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
காணாமல் போன தந்தை,மகன் தொடர்பில் தகவல் கோரல்-
கடந்த ஒரு வருடங்களாக யாழ். உடுவில் மானிப்பாய் வீதியில் வசிக்கும் இளம் குடும்பத்தரான பிறேம்குமார் நிந்துஜன் வயது 30 மற்றும் அவருடைய மகன் நிந்துஜன் தரணிகன் வயது 03 காணாமல் போயுள்ளார்கள். இவர்கள் காணாமல் போனமை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில அவருடைய மனைவியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இவர் சம்பந்தமான எந்தவொரு தகவலும் இதுவரையில் கிடைக்கப்பெறாத நிலையில் இவர்கள் சம்பந்தமான விபரங்களைத் தந்துதவும்படி சுன்னாகம் பொலிசாரினால் பொது மக்களிடம் இருந்தும் கோரப்பட்டுள்ளது. இவர்கள் சம்பந்தமான தகவல் தெரிந்தவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கம் 0212240323 அல்லது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 0774673943 தொலைபேசியுளுடனேயோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புதிதாக ஐந்து நாடுகளுக்கான தூதுவர்கள் நியமனம்-
ஐந்து நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எஸ்.ஸ்கந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டொக்டர் ஏ.எஸ்.யூ.மென்டிஸ் பஹ்ரேனுக்கான தூதுவராகவும் ஏ.ஜவாட் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை மனிஷா குணசேகர தென்கொரியா தூதுவராகவும் எம்.கே.பத்மநாதன் ஓமான் தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.