தமிழர்களை பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டது-ஆணையாளர்-

al hussainஇலங்கைத் தமிழ் மக்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டதாக மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் {ஹசைன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற பொஸ்னிய இனப்படுகொலை தொடர்பான விவாதத்தின் போது, வீடியோ கொன்பரன்ஸ் மூலமாக அவர் இதனைக் கூறியுள்ளார். படுகொலைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒன்றுபட்டிருக்க வேண்டும். கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் யுத்தத்தில் பலியான பொது மக்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது. தற்போது சூடான், புருண்டி மற்றும் மியன்மார் போன்ற நாடுகளிலும் இந்த நிலைமை காணப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சிகளும் வேட்புமனு தாக்கல் பற்றிய தகவல்களும்-

postal_votes_2முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இம்முறை பொதுத் தேர்தலில் குருநாகலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்பமனுவில் அவர் கைச்சாத்திட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில் இடம்பெற்று ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார். மஹிந்த வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவார் என அவரது ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். இதற்கிடையில் முன்னிலை சோசலிச கட்சி காலி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை நாளை சமர்ப்பிக்கவுள்ளது. வவுனியா, புத்தளம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைத் தவிர, ஏனைய மாவட்டங்களில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடவிருப்பதாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, திருகோணமலை, அனுராதபுரம், அம்பாறை மற்றும் குருநாகலை ஆகிய மாவட்டங்களில் அக்கட்சி ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளது. இதற்கிடையில், நாளை தமது கட்சி வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் என ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியில் இருந்து விலகிச் சென்ற முன்னிலை சோசலிச கட்சியும், இந்த முறை முதல் முறையாக தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணி, ஏழு மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது சம்மந்தமாக ஆலோசித்து வருவதாக அதன் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை தேர்தலில் தனித்து போட்டியிட சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி தீர்மானித்துள்ளது. அதன்படி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவென இன்றுவேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்-வடக்கு முதல்வர்-

vigneswaranபொறுப்புக் கூற வேண்டிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் வடமாகாண முதலைமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள விக்னேஸ்வரன், த ஹில் என்ற சஞ்சிகைக்கு எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். கடந்தகால ஊழல்கள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் இருந்து புதிய அரசாங்கத்தின்கீழ் இலங்கை முன்னேற முயற்சிக்கிறது. இந்நிலையில் பொருளாதார அபிவிருத்தி, பொறுப்புடைமை மற்றும் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு அமெரிக்காவும், சர்வதேச நாடுகளும் பல்வேறு வழிகளில் உதவ முடியும். அதேநேரம் வடக்கில் இருந்து இராணுவக் குறைப்பை மேற்கொள்ளல், பொது மக்களின் காணிகளை விடுவித்தல், போன்ற விடயங்களிலும் இலங்கை அரசாங்கம் அமெரிக்கா வலியுறுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

காணாமல் போனோர் குறித்து கடற்படை தளபதிகளிடம் விசாரணை-

navy2008-2009ம் ஆண்டு காலப்பகுதியில், கொழும்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காணாமல் போன 11 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் குறித்த வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது, இந்த காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் தற்போதைய கடற்படைத் தளபதி வயிஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக இரகசிய காவற்துறையினர் தெரிவித்தனர். அத்துடன் மேலும் பல கடற்படை அதிகாரிகளிடமும் இது குறித்து வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக இரகசிய காவற்துறையினர் நீதிமன்றத்துக்கு அறியப்படுத்தினர். இந்த சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி இருந்தனர். இக் காலப்பகுதியில் கடற்படைத் தளபதியாக இருந்த வசந்த கரன்னாகொடவின் பணிப்புரையின் பேரில், டி.கே.பி. ஜனநாயக்கவின் தலைமையில் விசேட புலனாய்வு பிரிவு ஒன்று செயற்பட்டது. இந்த பிரிவே குறித்த கடத்தல்களை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மைத்திரி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை-ராஜித சேனாரத்ன-

rajithaஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்புமனு வழங்குவது தொடர்பாக இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளதா என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்கப்படமாட்டாது என அண்மையில் நீங்கள் கூறியிருந்தீர்கள். இது பொய்யாகிவிட்டதே என அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், நான் ஒருபோதும் பொய் கூறவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியவற்றையே தான் கூறியதாக அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் யாருக்கு வேட்புமனு வழங்குவது என்பது தொடர்பாக ஜனாதிபதியே இறுதி முடிவெடுப்பார் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளதாகவும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் மேலும் பல மனித எச்சங்கள் மீட்பு-

trincoதிருகோணமலை, மெக்கெய்ஸர் மைதானத்தில் நேற்று மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் மேலும் நான்கு மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை நீதவான் முன்னிலையில்,மெக்கெய்ஸர் மைதானத்தில் நேற்று (மூன்றாவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய கடந்த ஆறாம் திகதி குறித்த மைதானத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதேவேளை, திருகோணமலை கிண்ணியா பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் 60 மில்லிமீற்றர் ரக குண்டை உப்பாறு பகுதிக்கு கொண்டுசென்று செயலிழக்க செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மீண்டும் ஊடகக் கட்டுப்பாடு-

oodahamஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளமைக்கு சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான குழு கவலை வெளியிட்டுள்ளது. ஊடகவியலாளர்களை சட்டத்தில் தண்டிக்கவோ, அவர்களுக்கு அபராதம் விதிக்கவோ அதிகாரம் வழங்கும் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளது. இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது அமுலில் இருந்த ஊடக ஒழுங்குமுறைக் குழுவை கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கினார். மேலும் ஊடங்களில் மீதான கட்டுப்பாடுகளையும் கலைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை மீண்டும் அமைத்து இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இது போன்ற நடவடிக்கை இலங்கை அரசு எடுத்திருப்பது சர்வதேச ஊடகவியலாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அழிவின் விளிம்பில் துவாலு: நாட்டைக் காக்குமாறு பிரதமர் வேண்டுகோள்-

countryபுவி வெப்பமயமாதலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள, உலகின் நான்காவது மிகச்சிறிய நாடான துவாலு அழிவின் விளிம்பில் உள்ளது. அதனைக் காக்குமாறு அந்நாட்டுப் பிரதமர் தனது உருக்கமான வேண்டுகோளை உலக நாடுகளிடம் விடுத்துள்ளார். பாரிஸில் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா. பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்திலான பயணத்தை துவாலுவின் பிரதமர் எனிலே ஸ்போகா மேற்கொண்டுள்ளார். பசுபிக் பெருங்கடலில் அவுஸ்திரேலியா மற்றும் ஹவாலிக்கு நடுவே குட்டித் தீவுகளைக் கொண்ட நாடு தான் துவாலு. வெறும் 10,000 பேருக்கான தேசமாக உள்ள துவாலு, பருவ நிலை மாற்றத்தால் உடனடியாகப் பாதிக்கப்படும் நாடாகப் பதிவாகியுள்ளது. புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க வேண்டும் என்ற இலக்கை, விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலின்படி 1.5 டிகிரி செல்சியஸாக மேலும் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் துவாலு நாட்டின் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.