நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெள்ளிக்கிழமையன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கும் கட்சிகள்
நாடாளுமன்றத் தேர்தலில் வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி., ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை வெள்ளிக்கிழமையன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன.
யாழ்ப்பாணம், வன்னி ஆகிய தேர்தல் மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்கள் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் தலைமையில் வெள்ளியன்று கையளிக்கப்பட்டிருக்கின்றன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான 8 பேர் இம்முறை யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றனர். கடந்த முறை தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் சென்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இம்முறை யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் வடமாகாண சபையின் உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் இம்முறை யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகின்றார்.பெண்கள் வரிசையில் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் மதினி நெல்சன் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும், சாந்தி சிறிஸ்கந்தராஜா என்ற ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் வன்னி மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனர்.
வன்னி மாவட்டத்தில் வடமாகாண சபையின் உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், டாக்டர் சிவமோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
டெலோ சார்பில் சிறிகாந்தா யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகின்றார். வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவரும் முன்னாள் கல்வித்துறை அதிகாரியுமாகிய ந. அனந்தராஜுக்கும் இம்முறை யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருக்கின்றது.
தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தி இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பது, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளை விடுவித்தல், காணாமல் போயுள்ளவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இந்தத் தேர்தலில் மக்களின் ஆணையைப் பெறப்போவதாக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், வன்னி ஆகிய தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுவதற்காக ஈபிடிபி கட்சியின் சார்பில் வெள்ளியன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் அந்தக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் போட்டியிடவுள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, தேசிய மட்டத்தில் ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைப் போன்று தமிழ் மக்களுடைய அரசியல் தலைமையிலும் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு இந்தத் தேர்தல் வழிசெய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஐக்கியதேசிய கட்சியின் சார்பில் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் கல்வித்துறை, வைத்தியத்துறை மற்றும் வர்த்தகத் துறை சார்ந்த இளைஞர்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றனர்.