நல்லாட்சிக்கான ஐ.தே. முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தம் பல கட்சிகள் கைச்சாத்து

rajitha ranilஇலங்கையில் அடுத்த மாதம் நடக்கவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொண்டுள்ள கட்சிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
கொழும்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , செயலாளர் கபீர் ஹஷீம், அமைச்சர் கரு ஜயசூரிய ஆகியோர் கையொப்பமிட்டனர். ஜாதிக ஹெல உறுமய சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க, அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றுள்ள குழுவின் சார்பில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன , அர்ஜுன ரணதுங்க மற்றும் எம்.கே.டி.எஸ்.குணவர்தன ஆகியோர் கையொப்பமிட்டனர்.
இங்கு பேசிய ரணில் விக்ரமசிங்க, கடந்த ஜனவரி எட்டாம் திகதி தொடங்கிய மக்கள் புரட்சியின் மூலம், முன்னர் பறிக்கப்பட்டிருந்த பல உரிமைகள் மக்களிடம் மீண்டும் திருப்பிக் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சீர்குலைக்கப்பட்ட மக்களின் சுதந்திரம், நாட்டின் சட்டம்-ஒழுங்கு ஆகியவை மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியை சீர்குலைக்கக்கூடிய பெரும் அச்சுறுத்தல் ஒன்று இப்போது உருவாகியுள்ளதாகவும், அதனை முறியடிப்பதற்காகவே பல அணிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கூறியுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, ஜனவரி 8-ம் திகதி தோற்கடிக்கப்பட்ட குடும்ப ஆட்சி மீண்டும் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றுள்ள குழுவைச் சேர்ந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, புதிய நாடாளுமன்றத்தில் தமது ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர், உடனடியாக அரசியலமைப்பின் 20-ம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
புதிய தேர்தல் முறையொன்றை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன்மூலம் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் அரசியலில் பிரவேசிப்பதை தடுக்க முடியும் என்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்