மக்களின் வாக்குகளை சிதறடிப்பதே தமிழ் தேசியத்திற்கு முரணான சக்திகளின் பிரதான நோக்கம்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்-

D.Sithadthanபொதுத் தேர்தலில் தமிழ் தேசியத்திற்கு முரணான சக்திகள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், அவை எமது வாக்குகளை சிதறடிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே, மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நான் மக்களோடு மக்களாக இருப்பவன் என்ற அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக சில மனக்குறைகளை என்னிடத்தில் அவர்கள் முன்வைக்கின்றார்கள். எனினும் தமிழ் மக்களின் ஒற்றுமை என்பது தற்போதைய காலத்தில் மிகமிக முக்கியமானது என்பதையும், அதன் அவசியத்தையும் அவர்கள் உணர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். அதனடிப்படையில் கூட்டமைப்பு தொடர்பாக அவர்கள் கொண்டிருக்கும் சிறுசிறு குறைகளுக்கு அப்பால் எமது கூட்டமைப்பை ஜனநாயக ரீதியாக இத் தேர்தலில் பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே பெருவாரியானவர்களிடத்தில் காணப்படுகின்றமையை வெளிப்படையாகவே அறியக்கூடியதாக உள்ளது.

அதனடிப்படையில் இத் தேர்தலில் எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும்பான்மை பலத்தை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அதேநேரம் எமது மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக தமிழ் தேசியத்திற்கு முரணான சக்திகள் களமிறக்கப்பட்டுள்ளன. இந்த சூட்சுமமான செயற்பாட்டையும் தமிழ் மக்கள் நன்றாக அறிந்துள்ளதுடன், அது தொடர்பில் விழிப்படைந்துள்ளனர்.

மேலும், வடகிழக்கு தாயகங்களில் நீண்டகாலமாக எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இத்தேர்தல் மிக முக்கியமானதொன்றாக அமைகின்றது. ஆகவே, அனைத்து மக்களும் ஒன்றுபட்டு தமது ஜனநாயகக் கடமையை செய்வதிலிருந்து பின்நிற்காது தமிழ் தேசியத்தின் குரலாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே நிச்சயம் வாக்களிப்பார்கள் என்றார்.