வீரமக்கள் தின நிகழ்வுகள்-

veeramakkal thinam (13)தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் இன்று 13ம் திகதிமுதல் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. வீரமக்கள் தினத்தின் முதலாம் நாளான இன்று வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலராஞ்சலியுடன் 26ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. வீரமக்கள் தினத்தின் இறுதிநாளான எதிர்வரும் 16ம்திகதி செயலதிபர் உமாமகேசுவரன் நினைவில்லத்தில் மலராஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.