தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 177 முறைப்பாடுகள்-

electionதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 177 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறான 87 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் சுவரொட்டிப் பிரசாரம் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் 24 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் பொருட்கள் விநியோகித்தமை தொடர்பில் 21 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. அரச சொத்துகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 20 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான 6 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் இதுவரை 16பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் 23 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.தாக்குதல் நடத்தப்பட்டமை வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை வாகனங்களில் வேட்பாளர்களின் சுவரொட்டிகள் காட்சிபடுத்தப்பட்டமை தொடர்பில் நேற்று 4 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலை போன்று தற்காலிக அடையாள அட்டைகளை இம்முறை தேர்தலிலும் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

தற்காலிக அடையாள அட்டைகளை பெறாதவர்கள் ஆகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். வாக்காளர்கள் தமது கிராம சேவகர் பிரிவிற்கு சென்று உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் இன்னும் சில நாட்களில் வழங்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களை அகர வரிசையில் ஒழுங்குப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். அகர வரிசையில் ஒழுங்கப்படுத்தப்பட்ட வேட்பு மனுக்கள் இன்றுமுதல் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய பரிசீலித்ததன் பின்னர் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்படவுள்ளன.