196 உறுப்பினர்களை தெரிவுசெய்ய 300 கட்சிகள், 201 சுயேட்சைகள் களத்தில்-

electionஎதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று 13ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலின் ஊடாக 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து நாடாளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இம்முறை 300, அரசியல் கட்சிகளும் 201, சுயேட்சை குழுக்களும் களத்தில் குதித்துள்ளன. அரசியல் கட்சிகளின் சார்பில் 312 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அதில் 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 225 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அதில் 36 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு தேசிய பட்டியல் ஊடாக 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். 196 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக அரசியல் கட்சிகளின் சார்பில் 3,653 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 2,498 பேரும் என மொத்தமான 6,151 பேர் இம்முறை தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் தரப்பில் தனித்து களமிறங்கியுள்ள இதர கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கிடையில் கடும் போட்டி நிலவும் என கூறப்படுகின்றது. ஏனைய மாகாணங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மலையகத்தை பொருத்தவரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது கோட்டையான நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தும் சிறுபான்மையின மக்கள் சிறுபான்மையினமாக வாழ்கின்ற பதுளை, கண்டி ஆகிய இரு மாவட்டங்களிலும் தனித்தும் போட்டியிடுகின்றன. பிரஜைகள் முன்னணியின் செயலாளர் ஸ்ரீரங்கா, இம்முறை போட்டியிடாத நிலையில் முன்னணியின் சார்பில் பெண்களை மாத்திரம் அவர் களமிறக்கியுள்ளார். தேர்தலில் போட்டியிடுபர்களுக்கான விருப்பு இலக்கம் ஒருவாரத்துக்குள் சகல மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் ஆகக்கூடுதலாக 8 வேட்புமனுக்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே நிராகரிக்கப்பட்டுள்ளன. அதில், அரசியல் கட்சிகளின் சார்பில் 2, வேட்பு மனுக்களும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 6 வேட்பு மனுக்களும் அடங்குகின்றன. இந்த 22 தேர்தல் மாவட்டங்களில் ஆகக்கூடுதலாக 792 பேர், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். அந்த மாவட்டத்தின் வாக்குச்சீட்டு ஏனைய மாவட்டங்களை விடவும் நீளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகக் குறைந்ததாக 88 பேர் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். இதேவேளை, முன்னாள் பிரதமர்களான ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் தி.மு ஜயரட்ன ஆகிய இருவருக்கும் இம்முறை வேட்பு மனுவில் இடமளிக்கவில்லை என்பதுடன் தேசியப்பட்டியலிலும் அவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை.

இதேவேளை அஞ்சல் மூல வாக்களிப்புகளுக்கான விண்ணப்பங்களை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. தேர்தல் செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். வேட்பு மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, தேர்தல் பிரசார பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில், வாக்காளர்களை தயார்படுத்தும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. வாக்காளர் அட்டைகளை அச்சிட்டு வெளியிடும் நோக்கில் அரச அச்சகம் தற்போது மும்முரமாக செயற்பட்டு வருவதாக அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.