கூட்டமைப்பு பலவீனப்பட்டால் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதை அரசு தட்டிக்கழிக்க ஏதுவாகிவிடும்-த.சித்தார்த்தன், பா.கஜதீபன்-
யாழ். சுதுமலை மத்திய சனசமூக நிலையம் மற்றும் வாசிகசாலை ஆகியவற்றின் அழைப்பின்பேரில் சுதுமலை மத்திய சனசமூக நிலைய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கருத்தரங்கொன்று இன்று நடைபெற்றது. இக் கருத்தரங்கில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள். இங்கு உரையாற்றிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் திரு.பா கஜதீபன் ஆகிய இருவரும், பாராளுமன்றத் தேர்தலிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தினை விளக்கிக் கூறினார்கள். அத்துடன் இன்றிருக்கின்ற நிலையிலே தமிழ் மக்களின் வாக்குகள் பிரிந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலவீனப்பட்டு போகுமானால் வர இருக்கின்ற அரசு மிகவும் இலகுவாகவே தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதைத் தட்டிக்கழிப்பதற்கு ஏதுவாகிவிடும். எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர் பலமான அமைப்பாக பாராளுமன்றம் செல்கின்றபோதுதான் சர்வதேசம்கூட தமிழ் மக்கள் தங்களுடைய பிரச்சினையில் தொடர்ந்தும் உறுதியாகவே இருக்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அரசுமீது அழுத்தங்களைக் கொடுப்பதற்கு உதவியாக இருக்கும். ஆகவே தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டியது மிகமிக அவசியமாகும் என்று வலியுறுத்திக் கூறினார்கள். இத் தேர்தல் பிரசாரக் கருத்தரங்கில் சனசமூக நிலையத்தைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.