வீரமக்கள் தின இறுதிநாள் நிகழ்வுகள்-
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தின 03ம் நாளான இன்றும் வவுனியா கோவில்குளம், புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. வீரமக்கள் தினமானது கடந்த 13ம்திகதி முதல் நாளை 16ம்திகதி வரையான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது. இம்முறை 26ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. வீரமக்கள் தின இறுதிநாளான நாளை மாலை 4மணியளவில் செயலதிபர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் மலராஞ்சலி மற்றும் மௌனஅஞ்சலி என்பன இடம்பெறவுள்ளதுடன் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெறவுள்ளதாக புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் அறிவித்துள்ளதுடன், அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் அஞ்சலிக் கூட்டத்தில் பங்குகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழு கூட்டத்திற்கு தடை-
கட்சித் தலைவரின் அனுமதியின்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறுவதற்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது ஜனாதிபதியின் நேற்றைய உரை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக இக்கூட்டம் நடைபெறவிருந்தது. எனினும் ஜனாதிபதி இக்கூட்டத்தை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையிலேயே நீதிமன்றம் மேற்படி கூட்டத்துக்கு தடை விதித்துள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலமையகத்தில் இடம்பெற்ற கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பின்பின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஐரோப்பிய ஒன்றியம்-
இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் வெளியிட்டுள்ளது. இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமையவே எதிர்வரும் பொதுத் தேர்தலை கண்காணிக்க தாம் இனங்கியதாக ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கான உயர் பிரதிநிதியும், ஐரோப்பிய ஆணைக்குழுவின் உபதலைவருமான பெட்ரிகா மொகிஹிரினி குழுவொன்றை நியமித்துள்ளார். கிரிஸ்டினா பிரடா தலைமையிலான இந்த குழுவில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர், தேர்தல் கண்காணிப்பு பணியகத்தின் பிரதானி ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக உபதலைவருமான பெட்ரிகா மொகிஹிரினி தெரிவித்தார். இதன்படி, இலங்கை தேர்தலை கண்காணிப்பதன் பொருட்டு 8 தேர்தல் ஆய்வாளர்கள் மற்றும் 18 நீண்டகால அவதானிப்பாளர்கள் முதற்கட்டமாக இலங்கை வரவுள்ளனர். தேர்தல் நடைபெறவுள்ள காலப்பகுதிக்கு அண்மித்த காலப்பகுதியில் 28 குறுகிய கால அவதானிப்பாளர்களும், தேர்தல் தினத்திலும் ஒரு தொகுதி கண்காணிப்பாளர்களும் இலங்கை வரவுள்ளதாக அவர் கூறினார்.
விருப்பு இலக்கங்கள் நாளை வெளியிடப்படும்-தேர்தல் ஆணையாளர்–
பொதுத் தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளருக்கான விருப்பு இலக்கம் நாளை மதியம் 12 மணிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பான பணிகள் தற்சமயம் விரைவாக இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் பொதுத் தேர்தலின் பொருட்டு 6 ஆயிரத்து 151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனிடையே, பொதுத் தேர்தல் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் அதிகாரிகள் மற்றும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் தேர்தல் கண்காணிப்பு பிரிவு மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இணைந்திருந்தனர். இதேவேளை கடந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற 9 உறுப்பினர்களுக்கு இந்த முறை அந்த வாய்ப்பு கிடைக்காது போயுள்ளது. இந்த பட்டியலில் முன்னாள் பிரதமர்களான டி எம் ஜயரத்ன மற்றும் ரட்ணசிறி விக்ரமநாயக்கவும் உள்ளடங்குகின்றனர். அதுபோல், கடந்த முறை தேசிய பட்டியலில் தெரிவான 10 உறுப்பினர்கள் இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பொதுத் தேர்தல் தொடர்பில் 195 முறைப்பாடுகள் பதிவு-
பொதுத் தேர்தல் தொடர்பில் 195 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து அதிகபடியாக 96 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதனைத் தவிர தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் காட்சிபடுத்தப்பட்டமை தொடர்பாகவும் தேர்தல்கள் செயலகத்திற்கு 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வாக்காளர்களுக்கு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பில் 23 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அரச சொத்துக்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் 22 முறைப்பாடுகளும், அரச ஊழியர்கள் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டமை குறித்து ஆறு முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் அதிகபடியாக 22 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதனைத் தவிர ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 12 முறைப்பாடுகளும், பதுளை மாவட்டத்தில் 10 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதேவேளை பொதுத் தேர்தலுக்கான உத்தியாகபூர்வ வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் இன்று காலை 9.30 அளவில் ஆரம்பிக்கப்பட்டதாக, அரச அச்சகர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு வாரங்களில் குறித்த வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடையலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
யாழ். நீதிமன்றத் தாக்குதல், முப்பது பேருக்கு விளக்கமறியல்-
யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, 30 சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறும், யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான 31 சந்தேகநபர்கள், இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, பாடசாலை மாணவர் ஒருவர் 5 இலட்சம் ஷரூபா பெறுமதியான 3 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சந்தேகநபரை ஞாயிறு தினங்களில் யாழ். பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏனைய 30 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதயவாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக ஊன்றுகோல் வழங்கிவைப்பு-(படங்கள் இணைப்பு)
யாழ். வட்டுக்கோட்டை தழிழரசுக் கட்சி அலுவலகத்தில் உதயவாழ்வு நிகழ்சிக்கூடாக சுழிபுரம் மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த திரு பெரியதம்பி குலசிங்கம் என்ற பயனாளிக்கு வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவாகள் கைத்தாங்கி ஊன்று கோல் ஒன்றினை வழங்கி வைத்தார். இதன்போது வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் திருமதி. சிவலிங்கம் அவர்களும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.