தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் கூட்டமைப்புக்கே-கரவெட்டியில் தேர்தல் கருத்தரங்கு-
யாழ். கரவெட்டியில் கரவெட்டி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றுமாலை 6மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு இடம்பெற்றது. கரவெட்டி ஒன்றியத்தின் தலைவர் திரு. பொன்னம்பலம் அவர்களுடைய இல்லத்தில் திரு. சிற்றம்பலம் செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் யாழ்.மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன், அருந்தவபாலன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழ் மக்களுடைய ஒற்றுமை, அதன் பிரதிபலிப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி, இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் சம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் என்பன தொடர்பில் தெளிவான விளக்கவுரையினை வழங்கி விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அத்துடன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்களுடைய ஒட்டுமொத்த ஆதரவினையும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கி யாழ் தேர்தல் மாவட்டத்தின் ஏழு ஆசனங்களையும் கைப்பற்றி வெற்றிபெறச் செய்யவேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூறினார்கள். இந்நிகழ்வில் திரு. இளையதம்பி ராகவன் அவர்கள் நன்றியுரையாற்றினார். இத் தேர்தல் கருத்தரங்கில் கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த பல கல்விமான்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.