பாதுகாப்பு செயலாளர் வடபகுதிக்கு விஜயம்-
பாதுகாப்புச் செயலாளர் பி.எம்.யூ.டி.பஸ்நாயக்க வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றதன் பின்னர், பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட பி.எம்.யூ.டி.பஸ்நாயக்கவின் முதலாவது வடக்கிற்கான விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள காணிகளை உரியவர்களிடம் கையளிப்பது குறித்து மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த விளக்கமளித்துள்ளார். அத்துடன் யாழ் பகுதிக்கான கடற்படை மற்றும் வான்படை கமாண்டர்களும் தமது பணிகள் குறித்த விளக்கத்தினை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர் மீள்குடியேற்ற, புனர்நிர்மாண மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் பிரதிநிதிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பொன்றையும் முன்னெடுத்துள்ளார் என, பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழில். 15 ஆயிரம் பேர் தபால்மூலம் வாக்களிக்க தகுதி-
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 15 ஆயிரம் பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஆகஸ்ட் 03ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு கடந்த 14 ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதியானவர்களின் பட்டியல்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாவட்டத்தில் 15 ஆயிரம் பேர் தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். எனினும் கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாக்களிப்புக்கு தகுதி பெற்றவர்கள் தொடர்பிலான விபரங்கள் இன்னமும் முடிவுறுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் கிளிநொச்சி மாவட்டத்தில் 1861பேர் விண்ணப்பித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 1939 பேரும், மன்னாரில் 2613 பேரும்தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரியவருகின்றது.
மருதனார்மடத்தில் கூட்டமைப்பின் முதலாவது பரப்புரைக் கூட்டம்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பரப்புரைக்கூட்டம் மருதனார்மடத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியின் தலைவர்கள் அனைவரும் பங்கெடுக்கும் மாபெரும் கூட்டமாக இந்தக் கூட்டம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை தமிழ் அரசு கட்சியின் பேரில் வடக்கு – கிழக்கில் 5தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. இதற்கான கூட்டமைப்பின் முதலாவது உத்தியோகபூர்வ பரப்புரைக்கூட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3மணிக்கு மருதனார்மடம் சந்தைத்தொகுதிக்கு முன்பாக நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஐ.தே.கவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் கண்டியில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகியது. அதேபோல ஐ.ம.சு.முவின் பிரச்சார கூட்டம் 17 ஆம் திகதி அனுராதபுரத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையில் ஆரம்பமாகியது.
ஐரோப்பிய சங்க பிரதிநிதிகள் நாளை இலங்கை வருகை-
எதிர்வரும் பொதுத் தேர்தலின் கண்காணிப்புப் பணிகளுக்காக மூன்று சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். ஐரோப்பிய சங்கம், பொதுநலவாய நாடுகளின் சங்கம் மற்றும் தெற்காசிய கண்காணிப்பாளர்கள் வலையமைப்பின் பிரதிநிதிகளே இவ்வாறு கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் இம்முறை தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக 110 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வரவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கண்காணிப்பு நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் நாளை நாட்டுக்கு வரவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையளவில் தமது கண்காணிப்புப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
சிறப்பு முகாமில் இருந்த 4 இலங்கையர்கள் விடுதலை-
தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள் 4 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கவைக்கப்பட்டிருந்த 19 இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்க வலியுறுத்தி சில மாதங்களாக உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்களில் 4 பேரை விடுதலை செய்து தமிழக அரசு கடந்த 11-ம் திகதி உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஈழ நேரு, மதுரை திருவாதவூர் முகாமைச் சேர்ந்த உமாரமணன், ஈரோடு பவானிசாகர் முகாமைச் சேர்ந்த ரமேஷ், சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த ஜெகன் எனும் ஸ்ரீஜெயன் ஆகிய 4 பேர் நேற்றுமாலை திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தி ஹிந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
யாழில் கன்டர் ரக வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்து-
கன்டர் ரக வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். பிரதான வீதியில் தண்ணீர் தாங்கிக்கு அருகாமையில் இன்று அதிகாலை 4.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சிலர் கிளிநொச்சியில் கொங்கிறீற் வேலை முடித்து விட்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தவேளை, பிரதான வீதி வழியாக செல்லும் போது, வாகன சாரதிக்கு தூக்கக் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது வாகனத்தை அவர் மின் கம்பம் ஒன்றில் மோதியுள்ளார். இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 14 நபர்களும் சிறு காயங்களுக்குள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் தொடர்பில் 271 முறைப்பாடுகள் பதிவு-
பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது. சட்டவிரோதமாக வழங்கப்பட்ட நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் அதிகபடியாக 110 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதனைத் தவிர சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் காட்சிபடுத்தப்பட்டமை குறித்தும் 35 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. பொருட்கள் விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் 39 முறைப்பாடுகளும் அரச சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்திமை தொடர்பில் 35 முறைப்பாடுகளும் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்துள்ளன அரச ஊழியர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும் ஏழு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபடியான தேர்தல் முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது. சுமார் 36 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச உதவி முகாமையாளர் சேவைக்கு 4000பேரை இணைக்க தீர்மானம்-
அரச உதவி முகாமையாளர் சேவைக்கு 4000 பேரை இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல கட்டங்களின் கீழ் புதிய சேவையாளர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார். அரச உதவி முகாமையாளர் சேவையாளருக்கான தேர்வு பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சை நடத்தவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். நேர்முகப் பரீட்சைகள் அடுத்த மாதம் முதல்வாரத்தில் இடம்பெறும் எனவும் அரச நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே சுட்டிக்காட்டியுள்ளார்.