சுன்னாகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு-(படங்கள் இணைப்பு)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் நேற்று (19.07.2015) யாழ். சுன்னாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதற்கான கூட்டம் வலிதெற்கு கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் திரு. குமாரவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. கௌரிகாந்தன், வலிமேற்கு சமூக மேம்பாட்டு இணைய ஆலோசகர் திரு. டேவிட், முன்னாள் கிராம சேவையாளர் திரு. பரமநாதன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் ஊர்ப் பெரியோர்களும், சமூக ஆர்வலர்களும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.
இங்கு உரையாற்றிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையின் பலத்தைக் காட்ட வேண்டிய ஒரு தருணம் மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது. எனவே நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்வரும் தேர்தலிலே 20ற்கும் மேற்பட் ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்று ஒரு பலம்மிக்க சக்தியாக நிற்பதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இதன்மூலமே வருகின்ற அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தினை தட்டிக்கழிக்க முடியாத நிலைமை ஏற்படும்.
அத்தோடு இங்கு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் சூட்சுமங்கள் நடந்தேறிவருகின்றன. இந்த விடயத்தில் தமிழ்மக்கள் விழிப்புடன் செயற்பட்டு தமது வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே செலுத்த வேண்டியது அவசியமாகும் என்று கூறினார்.