யுத்த காலத்தில் மக்கள் இடம்பெயராத வகையில் வவுனியாவை பாதுகாத்தோம்- வேட்பாளர் க.சிவநேசன் (பவன்)-
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டிருப்பதன் மூலமே அங்கத்துவ கட்சிகள் புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக செயற்பட முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வன்னித் மாவட்டதில் போட்டியிடும் புளொட் அமைப்பின் வேட்பாளர் திரு கந்தையா சிவநேசன் அவர்கள் தெரிவித்தார். வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள அறிவொளி அகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துக் கூறுகையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் இயக்கம் வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுகின்றது. வன்னி மாவட்டம் எல்லைப் பிரதேசமாக இருந்ததால் இங்கு பல அபிவிருத்தி திட்டங்களை நாம் செய்திருக்கிறோம். யுத்த காலத்தில் இப் பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயராத வகையில் தமிழ் பிரதேசமாக வவுனியாவை நாமே பாதுகாத்துள்ளோம். இங்குள்ள பல அபிவிருத்திகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நாம் தனித்து போட்டியிட்டோம். ஆனால் தமிழ் மக்கள் ஒற்றுமையை பெரிதும் விரும்பியமையால் இன்று நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஒற்றுமையாக இந்த தேர்தலை எதிர்கொள்கின்றோம். இந்த பாராளுமன்ற தேர்தல் மட்டுமன்றி உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என்பவற்றிலும் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டு வெற்றிகளையும் பெற்றுள்ளோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கத்துவம் வகிக்கின்ற ஒவ்வொரு கட்சிகளும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்கின்ற போதே அங்கத்துவ கட்சிகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான புரிந்துணர்வுகள் மூலம் பேச்சுக்களை நடத்தவும் தொடர்ந்தும் ஒற்றுமையாக இருக்கவும் முடியும். இதன்மூலமே தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்து பலம் மிக்க ஒரு சக்தியாக மாற்ற முடியும். இதனை எமது மக்கள் நன்கு அறிவார்கள். இதன் காரணமாக புளொட் அமைப்பும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய வேண்டிய தேவையுள்ளது. அதனால் வடமாகாண சபை உறுப்பினராக இருந்தும் அதனை விடுத்து நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றேன். பாராளுமன்ற தேர்தலின் பின்னரே தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து அங்கத்துவ கட்சிகளுடன் பேசி புரிந்துணர்வின் அடிப்படையில் முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
இது தவிர, கடந்த காலத்தில் இங்கு வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீள்குடியேறிய மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் திட்டமிட்டவகையில் வேறு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே இம்முறைத் தேர்தலில் தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ் மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய வேண்டும். அதற்காக மக்கள் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.