வலது குறைந்த வாக்காளர்களுக்கான அறிவுறுத்தல்-
வலது குறைந்தவர்கள் வாக்களிக்கச் செல்வதில் சிரமங்களை எதிர்நோக்கினால் வசதிகளைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதற்கென ஓகஸ்ட் 9ம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும். வலது குறைந்தவர்கள் வாக்களிக்கச் செல்லவென வாகன வசதி கோரி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட வைத்தியரிடம் பெறப்பட்ட சான்றுடன் தேர்தல்கள் செயலகம் விடுத்துள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பி கையளிக்க முடியும் என செயலகம் குறிப்பிட்டுள்ளது. தெரிவத்தாட்சி அதிகாரியின் தீர்மானத்தின்படி வலது குறைந்தவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
160 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியில்-
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான கண்காணிப்பு பணிகளுக்காக 160 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் அதிகளவானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கண்காணிப்பாளர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுமார் 70 கண்காணிப்பாளர்கள் இவ்வாறு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்தக் குழுவின் ஓரு தொகுதியினர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் கண்காணிப்பு காரியாயலம் ஒன்றையும் அமைக்கவுள்ளது. இதற்கு மேலதிகமாக தேர்தல் கண்காணிப்பு மற்றும் தெளிவூட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்ள மூன்று உள்ளுர் நிறுவனங்களுக்கு 1.2 மில்லியன் யூரோக்களை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது.
வலி மேற்கிற்கு 80லட்சம் பெறுமதியான பெக்கோ வாகனம் கையளிப்பு-
யாழ். வலி மேற்கு பிரதேச சபைக்கு ஏறத்தாழ 80 இலட்சம் ரூபா பெறுமதியான பெக்கோ வாகனம் கொழும்பில் வைத்து வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சனி ஐங்கரன் அவர்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது. சிறிது காலத்திற்கு முன்னதாக வலி மேற்கு பிரதேச சபைக்கு 8000 லீட்டர் கொள்ளளவுடைய நீர்த்தாங்கி மற்றும் ரோலர் வாகனங்களும் வலி மேற்;கு பிரதேச சபை தவிசாளிடம் கையளிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.