கிளிநொச்சி சிறுமி யர்ஷிகா சடலமாக மீட்பு-

deadbody-1கடந்த ஜூன் 21ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த கிளிநொச்சி, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமியின் சடலம், குறித்த சிறுமி காணாமல்போன இடத்திலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பொறிக்கடவை வயல்வெளியிலிருந்து நேற்று மீட்கப்பட்டது. குறித்த வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தது எனவும் அச்சிறுமி காணாமல் போனபோது அணிந்திருந்த ஆடை, அலிஸ்பாண்ட் மற்றும் செருப்பு ஆகியனவும் அச்சிறுமி புதைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் கூறினர். மேற்படி சிறுமியின் சடலம் குறித்த பகுதியில் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்ததகவலின் அடிப்படையில், அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், அச்சடலம் சிறுமி யர்ஷிகாவினுடையது என அவர் அணிந்திருந்த ஆடைகள் மூலம் அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். மேற்படி கிராமத்திலுள்ளவர்கள் 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வாய்க்கால் ஒன்றில் குளிப்பதற்காக தினமும் சென்றுவருபவர்கள்.இந்த சிறுமியுடன் தாயாரும் வேறுசிலரும் கடந்த மாதம் 21ஆம் திகதி மாலை வாய்க்காலில் குளிப்பதற்காக வீட்டிலிருந்து நடந்து சென்றுகொண்டிருந்தனர். சிறுமி நடக்க சிரமப்பட்டதையடுத்து அவ்வழியாக சைக்கிளில் சென்ற 14 வயது சிறுவனிடம் சிறுமியை வாய்க்கால் வரையும் கொண்டுசென்று விடுமாறு தாய் அனுப்பியுள்ளார். தாயார் வாய்க்காலடிக்கு வந்தபோது, சிறுமியைக் காணவில்லை. சைக்கிளில் கூட்டிச்சென்ற சிறுவனிடம் விசாரணை செய்தபோது, தான் சிறுமியை வாய்க்காலடியில் விட்டதாக கூறியுள்ளான். இதனையடுத்து, சிறுமியின் தாயார் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், அந்தச் சிறுவன் மற்றும் சிறுமியின் உறவினர்கள் என 5 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும், சிறுமி தொடர்பான எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, கடற்படையினர், இராணுவத்தினர் பொதுமக்கள் உதவியுடன் தேடுதல் மேற்கொண்டும் சிறுமி பற்றி எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. சிறுமியை காட்டேரி கடத்தியிருக்கலாம் என சிறுமியின் உறவினர்கள் கூறியிருந்தனர்.