நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் வெற்றியே முக்கியம்-ஆ.யதீந்திரா-

jathiஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்டு வெல்வதல்ல முக்கியம், நாம் பிரதிநித்துவப்படுத்தும் மக்களின் வெற்றியே முக்கியமென திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அரசியல் ஆய்வாளரும் இளம் வேட்பாளருமான ஆ.யதீந்திரா தெரிவித்துள்ளார். திருமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்ற நிலையில், நேற்றையதினம் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டமொன்று திருமலையிலுள்ள சில்வெஸ்டர் உல்லாச விடுதியில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருமலையில் இம்முறை இரு ஆசனங்களை வெற்றிகொள்ள வேண்டுமென்னும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கோரிக்கை தொடர்பில் பேசியபோதே யதீந்திரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யதீந்திரா மேலும் தெரிவிக்கையில், கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருமலையில் 44,000 வாக்குகளை பெற்றிருந்த போதிலும் கூட, தமிழ் மக்களால் அளிக்கப்பட்ட 8,000 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குகளும் சேர்ந்திருந்தால் நாங்கள் கிழக்கு மாகாணசபையில் இன்னும் பலமாக இருந்திருக்க முடியும். பொதுவாக கட்சியின் சின்னத்திற்கு வாக்களித்துவிட்டு விருப்பு வாக்குளை மக்கள் தேடுகின்ற போதுதான் அவர்கள் தவறாக வாக்களிக்க நேர்கிறது. இது அதிகம் பின்தங்கிய கிராமங்களில்தான் நிகழ்கின்றது. இதனை தவிர்ப்பதற்கு இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் வீட்டு சின்னத்திற்கு வாக்களித்துவிட்டு, ஜயா சம்பந்தனின் விருப்பு வாக்கிற்கு மட்டும் புள்ளடி போடுமாறு மக்களை நாங்கள் கோர முடியும். இதன் காரணமாக சின்னம், ஒரு விருப்பு இலக்கம் என்னும் அடிப்படையில் வாக்குகளை மக்கள் அளிக்க முடியும். இதனால் வாக்குகள் வீணாவதை நாங்கள் தடுக்க முடியும். இதற்கு அனைத்து வேட்பாளர்களும் இணங்கும் பட்சத்தில் ஒரு பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் வெல்லுவதல்ல முக்கியம் நாங்கள் பிரதிநித்துவப்படுத்துகின்ற மக்கள் வெல்ல வேண்டும் என்று மட்டுமே நான் சிந்திக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.