தேர்தல் தொடர்பில் 234 முறைப்பாடுகள் பதிவு-

election violenceபொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 234 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது. சில மாவட்டங்களில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டமை குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். பிரசார நடவடிக்கைகள் தொடர்பான 18 முறைப்பாடுகளும், அரச சொத்துக்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் 53 முறைப்பாடுகளும் பதிவானதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், நாட்டின் பல பகுதிகளிலும் மதுபானம் விநியோகிக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகளும் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பான பாரிய சம்பவங்கள் எதுவும் தமக்கு பதிவாகவில்லை எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பட்டார். இதேவேளை, பொருட்கள் விநியோகிக்ப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் தமது அமைப்பிற்கும் பதிவாகியுள்ளதாக கெபே அமைப்பு தெரிவிக்கின்றது. இந்த நிலையில், பொதுத் தேர்தல் தொடர்பில் 199 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ரசாங்க ஹரிஸ்சந்திர குறிப்பிட்டார்.

சிவிலுடையில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இராணுவத்தினர் விடுதலை-

courts (1)சாதாரண உடையில் கைதுப்பாக்கியுடன் வேனில் பயணித்த மூன்று இராணுவ வீரர்கள் கொழும்பு நுகேகொட மிரிஹான பிரதேசத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். மிரிஹானயில் இருந்து நுகோட கம்சபஹா சந்தி வரை சென்று கொண்டிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இராணுவ வீரர்கள் பயணித்த வேனின் இலக்க தகடு தொடர்பில் பிரச்சினை நிலவுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அவர்கள் மேஜர் ஜெனரால் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக ருவன் குணசேகர கூறியுள்ளார். இது தொடர்பில் இராணுவ பொலிஸாரிடம் அறிக்கை ஒன்று கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த மூன்று இராணுவ வீரர்களும், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் சயனைட் குப்பிகளுடன் முன்னாள் புலி உறுப்பினர் கைது-

arrest (2)சுமார் 75 சயனைட் குப்பிகள் மற்றும் 300 கிராம் சயனைட்டுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என கருதப்படும் ஒருவர் நேற்று தமிழகம் இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பாதை வழிகாட்டலுக்கு உதவும் நான்கு ஜீபிஎஸ் கருவிகள், 7கையடக்க தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. 39 வயது மதிக்கத்தக்க கே. கிருஸ்ணகுமார் எனப்படும் குறித்த நபர் 1990ஆம் ஆண்டுகளில் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டுள்ளார். பின்னர் 2009ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அவர் இடம்பெயர்ந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவரிடமிருந்து இலங்கை மற்றும் இந்திய நாணய தாள்களும், இரு நாடுகளிலும் பயன்படுத்தக் கூடிய வெள்வேறு சாரதி அனுமதி பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இலங்கை தமிழரை தமிழகம் உச்சிபுளிக்கு அழைத்து வந்த இரண்டு இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் அகதி முகாம் ஒன்றில் தங்கியிருந்த இவர், கடல் வழியாக யாழ்ப்பாணம் செல்ல ஆயத்தமான நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மன்னார் கல்லாறு விபத்தில் மூவர் உயிரிழப்பு-

accidentபுத்தளம் – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற சிறிய ரக பாரவூர்தி ஓன்று மன்னார் சிலாவற்துறை கல்லாறு பகுதியில் விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் ஸ்தலத்திலேயே இருவர் பலியானதுடன், மேலும் ஒருவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாயுள்ளார். பலியானவர்கள் அனைவரும் ஆண்களாவர். காயமடைந்த மேலும் 11பேர் மன்னார் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெருநாள் பண்டிகைக்காக புத்தளம் சென்று திருப்பியவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மன்னார் பெரியமடு பகுதியை சேர்ந்தவர்களாவர்.

ஜூலை 30க்கு முன் சொத்து விபரங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்-

election.....இந்தமுறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தும் நிதி அறிக்கையை ஜூலை 30ம் திகதிக்கு முன்னர் சம்ர்பிக்குமாறு தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. அதனடிப்படையில் தற்பொழுது மாவட்ட மட்டங்களில் வேட்பாளர்களின் தகவல்கள் திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாக தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இந்தமுறை தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிக்காட்டும் நிதி அறிக்கையை சமர்பிக்காத வேட்பாளர்களுக்கு வேட்பாளர்அடையாள அட்டைகள் வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்படுகின்றது. தமது சொத்து விபரங்களை சமர்பிக்கும் வேட்பாளர்களுக்கு மட்டும் இந்த வேட்பாளர் அடையாள அட்டையை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.