Header image alt text

கறுப்பு யூலையின் 32ஆம் ஆண்டு நினைவுகள்-(படங்கள் இணைப்பு)

black july 83 (1)கறுப்பு யூலையின் 32ம் வருட நினைவுதினம் நேற்று 23ம் திகதிமுதல் எதிர்வரும் 27ம் திகதிவரை அனுஸ்டிக்கப்படுகின்றது. வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ்அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியின்போது அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பெருமளவிலான தமிழ்மக்கள் தமது உடமைகளையும், சொத்துக்களையும், இழந்து அநாதரவாக்கப்பட்டனர். தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட இந்த அவலநிலையைத் தொடர்ந்தே இன விடுதலைப் போராட்ட இயக்கங்களில் பெருமளவு தமிழ் இளைஞர்கள் இணைந்தனர். இலங்கையிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளிலும் கறுப்பு யூலை நினைவு தினம் ஆண்டுதோறும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

Read more

தம்பி மு.தம்பிராசா அவர்களின் மகனை காணவில்லையென முறைப்பாடு-

wererereஅடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவின் மகனான திருவளவன் (வயது 18) என்பவரை நேற்றுமாலை 3 மணிமுதல் காணவில்லையென அவரது தந்தை மு.தம்பிராசா அவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். நகரத்திலுள்ள தனது அலுவலகத்திலிருந்து, அரசியல் பணியை மேற்கொண்டிருந்த தனது மகன் காணாமற்போயுள்ளதாக தந்தை தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தம்பி மு. தம்பிராசா அவர்கள் கூறுகையில், நேற்று அதிகாலை கொழும்பிலிருந்து நானும் எனது மகன் திருவளவனும் தேர்தல் வேலைகளில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணம் வந்து எனது அலுவலகத்தில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை பிற்பகல் 3.00 மணியளவில் எனது யாழ்ப்பாண அலுவலகத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளார் எனது மகனை இரவு 7.00 மணிவரை அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தும் கிடைக்காதபடியால் யாழ். காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளேன் என்றார்.

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு வடமாகாண சபையின் பரிந்துரை-

npc2_CIதமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் இணைத்துக் கொள்ள வேண்டிய சில பரிந்துரைகளை வடமாகாண சபை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை உறுதி செய்யும், அதிஉச்ச அதிகாரப் பகிர்வைக் கொண்ட அரசியல் தீர்வை பெற்றுக்கொடுத்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல் மற்றும் வடக்கில் பொருளாதார அபிவிருத்தி வலயங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை வடமாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் அக்டோபர் 25ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களுக்கு இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை-

fishingஇலங்கை கடற்பரப்பில் விரிக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவதும் தடைசெய்யப்பட்ட வலைகளை பிரயோகிப்பதுமான இந்திய மீனவர்களின் செயற்பாடுகள் நீடிக்குமாயின், இந்திய மீனவர்கள் தாக்குதலுக்குட்டுத்தப்படுவர் என இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தலைமன்னாரில் நடைபெற்ற இந்திய மற்றும் இலங்கை ஆகிய இருநாட்டு மீனவர்களுக்கிடையிலான கூட்டமொன்றின் போதே, இலங்கை மீனவர்கள் தங்களை எச்சரித்ததாக, தமிழ்நாடு மீனவ சங்க தலைவர் ஜெஸ்டின், இந்திய ஊடகமொன்றுக்கு தெரித்துள்ளார். இந்த கூட்டத்தின்போது, இந்திய கடற்படை அதிகாரியினால் எடுக்கப்பட்ட முடிவை விரும்பாததன் காரணமாகவே இலங்கை மீனவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர் என தெரிவித்துள்ள அவர் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்தும் கடல் வளங்களை சேதப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் கையாண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்திய மீனவர்கள் தமது மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியமைக்கு 1 கோடி ரூபாய் நட்டஈடு செலுத்த வேண்டும் என இலங்கை மீனவர்கள், இந்திய அரசாங்கத்துக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். இதேவேளை நேற்று நள்ளிரவு, அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் துரத்தியுள்ளனர்.

ஜனக பண்டார தென்னக்கோன் இராஜினாமா-

janakaஉள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மகாணசபை அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவியையும் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, லசந்த அலகியவன்ன மற்றும் எரிக் வீரவர்தன ஆகியோரும் ஏற்கெனவே தங்களது பிரதி அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

போலி இலக்க வாகனத்துடன் சுவரொட்டிகள் மீட்பு-

policeஅநுராதபுரம், கெபத்திகொல்லாவ பிரதேசத்தில் இராணுவ வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இலக்கத் தகட்டினை போலியான முறையில் பதிக்கப்பட்ட வாகனம் ஒன்றில் பாரிய அளவான தேர்தல் சுவரொட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. காவற்துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளருமான ஒருவருடைய சுவரொட்டிகளே மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகுpறது. இவ்வாறு 4 ஆயிரத்து 500க்கும் அதிகமான சுவரொட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பிரதி அமைச்சராக இருந்து தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வீரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராகவே இவ்விடயம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கைதுசெய்யப்பட்ட சாரதி, கஹட்டகஸ்திகிலியவையும், உதவியாளர் மதவாச்சியையும் வசிப்பிடமாக கொண்டவர்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சாவகச்சேரியில் மோட்டார் குண்டு மீட்பு-

bombயாழ்ப்பாணம் – சாவகச்சேரி – சங்கத்தானை பிரதேசத்திலுள்ள சிறு வீதியில் புதைந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் இன்று பிற்பகலில் மீட்க்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். மேலும், குண்டை செயலிழக்கச் செய்வதற்கு குண்டு செயலிழக்கும் பிரிவினரை நாடியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். 2000ஆம் ஆண்டு காலப் பகுதியில் மோதல்கள் இடம்பெற்ற பிரதேசமாக குறித்த பிரதேசம் காணப்படுகின்றது.

வன்னியில் தபால்மூல வாக்களிப்புக்கு 6967 பேர் தகுதி-

postal_votes_2எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்கவென 6967 பேர் தகுதி பெற்றுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 2654 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2670 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1643 பேரும் தபால் மூலம் வாக்களிக்கும் தகைமை பெற்றுள்ளனர். மூன்று மாவட்டத்துக்குமான வாக்குச் சீட்டுகள் கடந்த 22 ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்துக்கு எடுத்துவரப்பட்டு 23 ஆம் திகதி முல்லைத்தீவுக்கும் மன்னாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.