திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்-த.சித்தார்த்தன்-
etrtr
இனப்பிரச்சினைக்கு தீர்வாக திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியொன்றை ஏற்படுத்துவதை உள்ளடக்கியதாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமையப் பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவரும் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு நடைபெறவிருக்கின்ற தேர்தல் நிலைமைகளும் கட்சியின் நிலைப்பாடும் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இதனைத் தெரவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மகிந்த அரசாங்கம் மேற்கொண்டு வந்திருந்தது. இந்நிலையில் அந்த அரசை மாற்ற வேண்டுமென தமிழ் மக்களும ஏனைய மக்களும் விரும்பி மாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். இவ்வாறு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் மிகத் தெளிவாக சிந்தித்து தமது பலத்தையும் வெளிக்காட்டியிருந்தனர்.

இதேபோன்றே நடைபெறவிருக்கின்ற தேர்தலிலும் தமிழ்; மக்கள் அனைவரும் ஓரணியாக நின்று தமது பலத்தை எடுத்துக் காட்ட வேண்டும். தமிழ் மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகள் முதல் அடிப்படைப் பிரச்சினைகள் வரை அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

இவ்வாறு தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்றே நாம் வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளும் தீர்க்கப்படாத நிலையே இருக்கின்ற போது, இவற்றைத் தீர்ப்பதாக மக்களுக்கு தென்னிலங்கையைச் சார்ந்த கட்சிகள் உட்படப் பலரும் வாக்குறுதியளிக்கின்றனர்.
குறிப்பாக தென்னிலங்கையை சேர்ந்த கட்சிகள் தமிழர் தாயகமான வட, கிழக்கில் போட்டியிடுகின்றபோது தமிழ் மக்களுக்குப் பலவற்றைக் கூறுகின்றனர். அவவாறு கூறுகின்ற பலவும் அவர்கள் சார்ந்த கட்சியின் கொள்கைகளில் முற்றாக மாறுபட்டே உள்ளன. அதாவது ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம், அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக இருக்கலாம். அக்கட்சி சார்பில் இங்கு போட்டியிடுகின்றவர்கள் மக்களுக்கு பல வாக்குறுதிகளையும் ஆசை வார்த்தைகளையும் நடைமுறைச் சாத்தியமற்றவையையும் கூறலாம்.
இவ்வாறு தென்னிலங்கையிலிருந்து வருகை தரும் கட்சிகள் இங்குள்ள இளைஞர், யுவதிகளின் சுயவிபரக் கோவைகளை சேகரிக்கின்றன. அதனை நம்பி இளைஞர்கள் ஏமாற வேண்டாம். வெற்றிடங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலுள்ளன. அனைவருக்கும் வாய்ப்பு வழங்க அவர்களால் முடியாது. அவர்கள் உங்களை ஏமாற்றுகின்றனர்.
இத்தகையதொரு நிலையிலேயே கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் தயாரிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. கூட்டமைப்பின் இத் தேர்தல் விஞ்ஞாபனமானது அங்கத்துவக் கட்சிகளின் கருத்துக்களையும் உள்வாங்கி தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்மை. ஆனால் தீர்வுத் திட்ட விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும், பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் எந்தவொரு மாற்றுக் கருத்துக்களும் இல்லை.
இவ்வாறு எமது இலக்கை அடைவதற்கு கருத்து வேறுபாடுகள் இருந்ததல்லை. கூட்டமைப்புக்குள் பிரிவு ஏற்பட்டுள்ளது என வெளியில் கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம். எங்கள் ஒற்றுமையை தேர்தல் மூலம் தமிழ் மக்கள் காப்பாற்ற வேண்டும் என்றார்.