திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)
வவுனியா திருநாவற்குளத்தில் அமைந்துள்ள கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் நாமம் கொண்ட உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று (25.07.2015) திரு. ராமநாதன் ராம்தீபன் அவர்களது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர் திரு ஜி.ரி.லிங்கநாதன்(விசு), தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான திரு கந்தையா சிவநேசன்(பவன்), வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் திரு எஸ்.ஜெகதீஸ்வரன்(சிவம்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வின் சிறப்பு மற்றும் கௌரவ அதிதிகளாக பிறமண்டு வித்தியாலய அதிபர் திருமதி ம.திருவருள்நேசன், ஓய்வுபெற்ற தொழில் திணைக்கள உதவி ஆணையாளர் திரு சோ.நகுலேஸ்வரம்பிள்ளை, முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு எஸ்.இராஜேஸ்வரன், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு பா.பாலேந்திரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இங்கு உரையாற்றிய வட மாகாணசபை உறுப்பினர் திரு ஜி.ரி.லிங்கநாதன்(விசு) அவர்கள், முன்பள்ளியின் விளையாட்டு விழா வெகு சிறப்பாக திட்டமிடப்பட்டு, ஏனைய முன்பள்ளிகளினை விட சிறப்பாக நடைபெற்றதை தான் அவதானித்ததாக தெரிவித்தார், எமது அமைப்பின் தர்மலிங்கம் நாகராஜா இதற்கு பல்வேறு வழிகளில் உதவி புரிகின்றமை குறிப்பிடத்தக்கது எனவும், அத்துடன் எமது கிராமத்தின் நிலைமைகள் குறித்து நேரடியாக மக்களுடன் கலந்துரையாட எமது முதலமைச்சரை வரவழைக்கும் முயற்சி 6 மாத காலங்கள் ஆகியும் இன்னும் கைகூடவில்லை எனவும், கடந்த 15 வருடங்களாக எமது அமைப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர் இல்லாமையினால் எமது குடியேற்றங்கள்மீது எமது அபிவிருத்தியின் வேகம் முடக்கப்பட்டமை நீங்கள் யாவரும் அறிந்ததே, எனவே உங்களின் கிராமங்களுக்கு யார் தேவையோ அதனை நன்கு உணர்ந்து உங்கள் உரிமையான வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
இங்கு உரையாற்றிய வட மாகாணசபை உறுப்பினரும், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்கள், எமது கிராமத்தின் வளர்ச்சியை கண்டு தான் பெருமிதம் கொள்வதாகவும், சிறார்களின் விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றமைக்கு எமது பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்பும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையுமே வெளிப்படையாக தெரிவதாகவும், எமது அமைப்பின் தர்மலிங்கம் நாகராஜா நிகழ்வை சிறப்பிக்க வழங்கி வரும் ஒத்துழைப்பில் இவ் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுவதாகவும், யுத்த காலத்தின் பின்னர் எமது குடியேற்றத்தின் வளர்ச்சி நகரத்தின் தன்மையை வெளிப்படுத்துவதையிட்டு பெருமிதம் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.