பிரான்ஸில் 26ஆவது வீரமக்கள் தினம் மற்றும் கறுப்பு ஜூலை தினம் அனுஸ்டிப்பு-(படங்கள் இணைப்பு)

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகத் தோழர்கள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினமும், வெலிக்கடைச் சிறையிலே 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை என்பவற்றை நினைவுகூரும் வகையில் மேற்படி கறுப்பு யூலை நினைவு தினமும் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன் ஆரம்ப நிகழ்வாக கழகத்தின் பிரான்ஸ் கிளை அமைப்பாளர் திரு. ஜோன்சன் அவர்கள் அஞ்சலி நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். இதன்போது விடுதலைப் போராட்ட வரலாற்றில் போராட்டத்தை முன்னெடுத்த உயிர்நீத்த அனைத்து தலைமைகளுக்கும் சக வீரமக்களுக்கும் பொதுமக்களுக்கும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ச்சி நிரலினை திரு ஜோன்சன் அவர்கள் திரு. கந்தசாமி அவர்களிடம் கையளித்தார்.
தொடர்ந்து கழகத்தின் முன்னைநாள் மகளீர் அணிச் செயலாளரும், சிரேஸ்ட உறுப்பினருமான திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன் அவர்கள் நினைவுச்சுடரினை ஏற்றிவைத்து அனைத்து வீரமக்களுக்கும் மலர் அஞ்சலி வணக்கம் செலுத்தி சிறப்புரை ஆற்றினார். அவர் தனதுரையின்போது, காந்தீயத்தின் பெருமை பற்றியும், அதன் செயற்பாடு தொடர்பிலும் விளக்கியதோடு, காந்தீய செயற்பாடுகள் நிறுத்தப்பட்டபோது அதன் செயற்பாடுகளை புளொட் அமைப்பு தொடர்ந்து முன்னெடுத்தது பற்றியும் விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து கழகத்தின் முன்னாள் உபதலைவர் அமரர் மாணிக்கதாசன் அவர்களின் சகோதரர் திரு. ஆனந்தன் அவர்கள் வீரமக்களுக்கு மலர்மாலை அணிவித்தார். நிகழ்விற்குத் தலைமைதாங்கிய திரு. கந்தசாமி அவர்கள் தலைமையுரையினை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து கழகத்தின் வீரமக்கள் தின அறிக்கையை திரு ஜோன்சன் அவர்கள் வாசித்தார். தொடர்ந்து கறுப்புஜூலை, இனப்படுகொலை நினைவுதின நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா ஸ்தாபகரும், கண்ணதாசன் கலையரங்கத்தின் தலைவரும், பிரான்சில் உள்ள உலகப் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளருமான திரு. மரியாம்பிள்ளை ரவீந்திரன் அவர்கள் கறுப்புஜூலை இனப்படுகொலையை நினைவுகூர்ந்து உரைநிகழ்த்தினார். திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் இங்கு உரையாற்றும்போது. அமைப்புக்களுக்குள் ஒற்றுமையின் அவசியத்தினை வலியுறுத்திப் பேசினார்.
முன்னாள் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்தவரும், நேரடியாக வெலிக்கடை துன்பியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு பின்பு மட்டக்களப்பு சிறையுடைப்பின்போது தப்பியவரும், இன்றுவரை எம் மத்தியில் வரலாற்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவருமான திரு.அழகிரி அந்தோனிப்பிள்ளை அவர்கள் தனது பதிவினை இங்கு பகிர்ந்துகொண்டார்.
அத்துடன், டெலோ அமைப்பைச் சேர்ந்த திரு. லோகநாதன் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை பற்றியும் அதன் செயற்பாடுகள்; தொடர்பாகவும் விபரமாகக் கூறினார். மேலும், தாயகத்தில் தமிழரசுக் கட்சியில் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் ஆரம்பகால செயற்பாட்டாளராக இருந்த திரு. சி.கணேசலிங்கம் அவர்கள் பேசம்போது, புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் போராட்ட தந்திரம் பற்றி எடுத்துக் கூறினார்.
ஈழ ஆர்வலரும், சிறந்த சமூக சேவையாளருமான மதிப்பிற்குரிய திரு பாலச்சந்திரன் அவர்கள் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் அமைப்புக்களின் ஒன்றிணைப்பின் அவசியம் பற்றி எடுத்து விளக்கினார். அத்துடன் வரலாற்று ஆசிரியரும் சிறந்த படைப்பாளியும் சிறந்த சமூகப் பணியாளரும் இலக்கியவாதியும், ஈழத்து சக்கரவர்த்தி எல்லாளன், மாமன்னன் இலங்கேஸ்வரன் ஆகிய இரண்டு புத்தகங்களின் ஆசிரியருமான திரு கனகசபை அரியட்ணம் அவர்கள், வித்துடல்கள் விதைக்கப்பட்ட வீரமக்களின் விடிவிற்கான போராட்டம் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பின் திரு கண்ணா அவர்கள் பேசுகையில், அமைப்புக்களின் ஒற்றுமை பற்றியும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு, வாழ்வாதாரப் பணி பற்றியும் விளக்கினார். மேலும், தமிழரசுக் கட்சியில் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களது தலைமையில் ஆரம்பகால செயற்பாட்டாளராக செயற்பட்ட வீரா அவர்கள் பேசுகையில், போராட்டத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றி விபரித்துக் கூறினார்.
இந் நிகழ்வின்போது செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன், உபதலைவர் அமரர் மாணிக்கதாசன் ஆகியோரின் பாடல், காணொளி இறுவெட்டு வெளியீடும் இடம்பெற்றது. இறுவெட்டினை அமரர் மாணிக்கதாசன் அவர்களின் சகோதரர் திரு ஆனந்தன் அவர்கள் வழங்க பிரான்ஸ் கிளையின் தோழர் திரு சபா அவர்கள் பெற்றுக்கொண்டார். பிரான்ஸ் கிளையின் அமைப்பாளர் திரு. ஜோன்சன் அவர்கள் நன்றியுரை கூறியதைத் தொடர்ந்து கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.
நன்றி தொடர்புகட்கு: பிரான்ஸ் கிளை 0753265173 0753749321 0652388554