தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் 663 முறைப்பாடுகள் பதிவு-
தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் இதுவரை 663 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக நியமனங்கள் மற்றும் பதவியுயர்வு வழங்கப்பட்டமை தொடர்பில் அதிகப்படியாக 154 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் செயலகத்திற்கு 148 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறித்து 95 முறைப்பாடுகளும் அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டமை குறித்து 55 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
தமிழகத்திலிருந்து 45 அகதிகள் நாடு திரும்பல்-
45 பேரைக் கொண்ட மற்றுமொறு தொகுதி இலங்கை அகதிகள் நேற்று நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் திருச்சி, திண்டுகல், கன்யாகுமாரி, விழுப்புரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை, கரூர், திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களிலுள்ள அகதி முகாம்களில் தங்கியிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் இவ்வாறு 41 இலங்கையர்கள் தாயகம் திருப்பியதாகவும், இறுதியாக கடந்த மாதம் 46 அகதிகள் நாடு திருப்பியதாகவும் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீளவும் தாயகம் அனுப்புவதற்கு இரு நாட்டு உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணப் பையில் சடலம் கண்டுபிடிப்பு-
கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை அநுராதபுரம் பஸ் தரிப்பு இடத்தில் பயணப் பை ஒன்றினுள் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ் தரிப்பு நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பயணப்பை ஒன்றை திறந்து பார்த்த வியாபாரி ஒருவர் அதில் சடலம் இருப்பதைக் கண்டதும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
காணாமற்போனதாக கூறப்பட்ட தம்பிராஜாவின் மகன் கைது-
யாழில் கடந்த 23ம் திகதிமுதல் காணாமல் போனதாக கூறப்பட்ட மு.தம்பிராஜாவின் 19வயதான திருவளவன் தம்பிராஜா வெள்ளவத்தையில் வைத்து நேற்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழிலிருந்து கொழும்புக்கு வந்த விஷேட பொலிஸ் குழு, வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆகியோருடனான குழுவுடன் இணைந்து அவரை கைது செய்ததாகவும், நேற்றிரவு விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். திருவளவன் தம்பிராஜா அவரது சுயவிருப்பின் பேரில் யாழிலிருந்து கொழும்புக்கு பஸ்சில் வந்துள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அதனூடாக அவர் கடத்தப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் யாழ்.பொலிஸ் பொறுப்பதிகாரி கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.