கடும் போக்காளர்களுக்காக எமது நியாயமான கோரிக்கையை விட்டுக்கொடுக்க முடியாது-புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்-(நேர்காணல் ஆர்.ராம்)

Annar kb (18)தென்னிலங்கையில் உள்ள கடும்போக்காளர்களுக்காக அரசியல் தீர்வு விடயத்தில் நாம் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கையை விட்டுக்கொடுக்க முடியாது என புளொட் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். 

கேள்வி:- தற்போது பல அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் களமிறங்கியுள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்கு யாழ் தேர்தல் களம் சவாலானதான மாறியுள்ளதா?

பதில்:- தென்னிலங்கையைச் சேர்ந்த பெயர் ஊர் தெரியாதவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியத்தை கையில் எடுத்துக் கொண்டு இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். குறிப்பிட்ட கட்சிகள், சுயேட்சைகள் மட்டும் களத்தில் இருந்தால் அவை தொடர்பில் மக்களுக்கு தெளிவுநிலையொன்று இருக்கும். ஆனால் தற்போதைய நிலைமையால் மக்கள் தவறுதலாக மாறிமாறி வாக்களிக்கும் சூழலொன்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
தென்னிலங்கையிலிருந்து வருகை தந்துள்ள கட்சிகளில் போட்டியிடுபவர்கள் அக்கட்சிகளின் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களையே மக்கள் மத்தியில் தெரிவித்து வருகின்றனர். உண்மையிலேயே இவர்கள் வெற்றி பெற்றால் அக்கட்சிகளின் நலன்கள் சார்ந்தே செயற்பாடுவார்களே தவிர தமிழ் மக்களின் உரிமைகளை, தேவைகளை முன்வைத்து செயற்படமாட்டார்கள்.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தற்போது பல கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் திட்டமிட்டு களமிறக்கப்பட்டுள்ளன. அவர்களால் வெற்றி பெறமுடியாது விட்டாலும் கூட வாக்குச் சிதறல்களை ஏற்படுத்துவதையே பிரதான இலக்காக கொண்டிருக்கின்றார்கள். இது தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

பொதுமக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தி இருந்தாலும் அது வெறுப்பு அல்ல. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும். கடும் போக்காளர்களாக நாம் இருக்க வேண்டும் என மக்கள் விரும்பவில்லை.
ஆனால் தமது கோரிக்கையில் வலுவாக இருக்கவேண்டும். ஒரு நியாயமற்ற தீர்வை அல்லது அபிலாசைகளை வழங்காத தீர்வை ஏற்கக் கூடாது என்பதை வலியுறுத்துகின்றார்கள்.

தமிழ் மக்கள் ஒற்றுமையாகவே உள்ளார்கள். சில விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் முரண்பட்டாலும் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் தொடர்பாக எந்தவிதமான கருத்து வேற்றுமையும் கிடையாது. அதேநேரம் அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்த வடகிழக்கில் சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி முறைமையே தீர்வாக இருக்கும் என்பதில் எமக்கு கருத்து வேறுபாடு இல்லை. அதனை எமது தேர்தல் விஞ்ஞாபனம் வெளிப்படுத்தி நிற்கின்றது.

கேள்வி:- திம்பு கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் தற்போது வலுப்பெற்றுள்ளன. திம்பு பேச்சுவார்தையில் பங்கேற்றவர் என்ற வகையில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்:- 1985ஆம் ஆண்டு ஐந்து விடுதலைப் போராட்ட குழுக்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன. அதன் நிறைவில் தமிழரைத் தேசிய இனமாக அங்கீகரித்தல், இலங்கையில் தமிழர்களுக்குத் தனிநிலப் பகுதியை அங்கீகரித்தல், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல், மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் குடியுரிமை, அடிப்படை உரிமைகள் வழங்குதல் ஆகிய நான்கு விடயங்களையும் மையப்படுத்திய கோட்பாடுகள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையிலிருந்து நாம் விலகவில்லை. திம்பு கோட்பாட்டை அரசியல் அமைப்பில் எழுத முடியாது. எமது விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் தீர்வு விடயத்தில் அவ்வாறே கூறிவிடமுடியாது. ஆனால் அந்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே இணைந்த வடகிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டியை தீர்வாக முன்வைத்துள்ளோம். இதனை சரியான முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கேள்வி:- 2009இற்கு பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும், வடமாகாண சபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே ஆணையை வழங்கி வந்துள்ளார்கள். எனினும் அவர்களின் உடனடிப் பிரச்சினைகள் இன்றுவரையில் தீர்க்கப்படாததொன்றாகவே காணப்படுகின்றதே?

பதில்:- விடுதலைக்காகப் போராடும் கட்சியானது தனது மக்களைப் பாதுகாப்பதே பிரதான கடமையாகவுள்ளது. அதனடிப்படையில் எமது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இருவழிப் பாதையாக பார்க்கிறோம். ஒன்று தீர்வு பற்றியது மற்றயது மக்கள் முகம் கொடுக்கும் அன்றாடப் பிரச்சினை பற்றியது. மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினை மிக முக்கியமானது இதைத் தவிர்த்துவிட்டு தீர்வுதான் வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுவோமாக இருந்தால் எம் சமூகம் பின்னடையும். ஆரோக்கியமான சமூகம் தன்னுடைய உரிமைக்காக போராடும். ஆகவே முதலில் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவேண்டும்.

90ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரம், சிறைச்சாலையிலுள்ள இளைஞர்களை விடுவித்தல், காணிகளை விடுவித்து சொந்தக் காணிகளில் குடியேற்றுதல் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்புக்கான வழிகளை ஏற்படுத்தல் போன்ற விடயங்களில் நாங்கள் முழுமையாக கவனம் செலுத்தியபோதும் முடிவு காணப்படாத நிலை தொடர்வதால் மக்கள் அங்கலாய்க்கும் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே குறித்த விடயங்களில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

வடமாகாண சபை மூலம் முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவதற்கு முயற்சித்தோம். அதன்மூலம் புலம்பெயர் சமூகம் மூலம் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலம் நடவடிக்கை எடுத்தோம். அம்முயற்சிகளுக்கு கடந்த கால அரசாங்கத்தில் பாரிய தடை இருந்தது. இந்நிலையில் அது குறித்த செயற்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான முயற்சிகளை நாம் கைவிடவில்லை. தற்போது தென்னிலங்கைச் சூழல் குழப்பகரமானதாக உள்ளது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரவுள்ளது என்பதே கூறமுடியாதுள்ளது. எனினும் இவ்விடயங்கள் குறித்து காத்திரமான அழுத்தங்களைப் பிரயோகித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமானதாக இருக்க வேண்டும். அதனை மக்கள் இந்த தேர்தலில் நிரூபிக்க வேண்டும்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலின் விஞ்ஞாபனம் தனிநாட்டுக் கோரிக்கையே என தென்னிலங்கையில் அரசியல் களத்தில் பகிரங்கமாக கூறப்பட்டுள்ளதே?

பதில்:- ஒற்றையாட்சியின் கீழ் வாழலாம் என்ற நிலைமை 1977க்கு முன்பு இருந்தாலும் சமஷ்டி அரசாங்கம் தொடர்பாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதனை ஏற்க மறுத்த அரசாங்கம் எம்மைப் புறம்பாக போகும் நிலைக்கு தள்ளிவிட்டிருந்தது. அதன் பின்னரே ஆயதப் போராட்டமாகவும் ஈழக் கோரிக்கையாகவும் நிலை உருவானது.

தென்னிலங்கையில் கடும்போக்காக உள்ளவர்களுக்காக எமது நியாயமான கோரிக்கையை விட்டுக்கொடுக்க முடியாது. அவ்வாறு விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். அதேநேரம் தென்னிலங்கையில் கடுமையான எதிர்ப்பை உருவாக்கி அதில் எம் உரிமையை வென்றெடுக்கத் தடையான நிலைமை உருவாகும் நிலைமை ஏற்படுவதற்கான ஏது நிலைகள் குறித்தும் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

இதற்காகவே எமது அடிப்படை விடயத்தை பகிரங்கமாக கூறவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டோம். குறிப்பாக தந்தை செல்வா காலத்திலிருந்தே இந்த விடயத்தையே கூறிவருகின்றோம். சமஷ்டி ஆட்சியை ஏற்றுத்தான் கையொப்பமிட்டோம்.

அவ்வாறிருக்கையில், மக்கள் உரிமை மட்டுமல்ல வாழ்வையும் கேள்வியாக்க முடியாது. நாம் எல்லாம் மக்களுக்காகவே செயற்படுகின்றோம். வாக்குக்காக அல்ல. எமது மக்கள் உணர்ச்சி கொள்கின்றனர் என நாம் உணர்ச்சிகொள்ள முடியாது. நாமும் நீண்டகாலம் இந்த நெருக்கடிக்குள் வாழ்ந்து வருபவர்கள். அதன் ஆபத்தையும் சந்தித்தவர்கள். மக்களின் உணர்ச்சிக்காக கதைப்பவர்கள் பல விடயங்களை கதைத்து விட்டு சென்றுவிடுவார்கள். நாங்கள் மக்களுடன் மக்களாக தொடர்ந்து இருப்பவர்கள். மக்களின் உணர்வுகள், தேவைகள் பற்றி தெரியும். மக்களை பாதுகாப்பாக எப்படி விடுதலைப் பாதையூடாக எம் இலக்கை அடைய முடியும் என்று ஆராய்ந்தறிந்தே செயற்பட வேண்டியவர்களாக உள்ளோம். அதனடிப்படையிலேயே செயற்படுகின்றோம்.

தென்னிலங்கைத் தலைவர்கள் எம்மை ஒடுக்கும் தலைமைகளாவே உள்ளனர். எம் சிந்தனைகளை அவர்களால் மாற்ற முடியாது. எனவே எமது மக்களின் ஆணைபெற்று செல்லும் நாம் அவர்களின் சிந்தனைகளுக்கும் அழுத்தங்களுக்குமே முக்கியத்துமளிக்க வேண்டியவர்களாக உள்ளோம். மக்கள் கவனமாக சிந்தித்து எமக்கு எதிரான பரப்புரைகள் தொடர்பில் உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கவேண்டும். தமிழ் மக்களின் வாக்குகள், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்த உதவியாக இருக்கும். தமிழ் மக்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பலத்தை உணர்த்த வேண்டும்.

(நன்றி வீரகேசரி-29.07.2015)