நேபாள மதஸ்தலங்களை புனரமைக்க இலங்கை நிதியுதவி-
நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியினால் சேதமடைந்த மதஸ்தலங்களை புனர் நிர்மாணம் செய்யவென நிதி உதவியளிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேபாள பூமியதிர்ச்சியினால் பல மதஸ்தலங்கள் சேதமடைந்தன. அவற்றில் முக்கிய இரு மதஸ்தலங்களை புனர் நிர்மாணம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த புனர்நிர்மாணப் பணிகளை திட்டமிடுவதற்காக தொழில்நுட்ப அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை நேபாளம் அனுப்புவதற்கும், குறித்த நிர்மான பணிகளை முன்னெடுக்கும் பணிகளை இலங்கை இராணுவத்திற்கு ஒப்படைப்பதற்கும், குறித்த புனர்நிர்மாண பணிகளுக்காக 345 மில்லியன் ரூபாவினை நிதியுதவியாக வழங்க புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரியவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ரூபவாஹினி தலைவர் பதவி விலக தீர்மானம், சாந்த பண்டார இராஜினாமா-
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் சோமரத்ன திஸாநாயக்க பதவி விலகத் தீர்மானித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஓகஸ்ட் 3ம் திகதி இராஜினாமா செய்யவுள்ளதாக சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை ஊடகத்துறை பிரதியமைச்சர் சாந்த பண்டார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். குருநாகலில் உள்ள தனது இல்லத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.
மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இலவச மின்சாரம்-
வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது 232,828 குடும்பங்கள் (796,342 நபர்கள்) வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இக்குடும்பங்களில் பெரும்பாலான மக்கள் தமக்குரிய மின் இணைப்புக்களை பெறமுடியாத நிலையில் உள்ளனர். எனவே மீள்குடியேற்றப்பட்ட 20,000 குடும்பங்களுக்காவது இலவச மின் இணைப்பை பெற்றுக்கொடுக்கவும், 2015ம் ஆண்டில் மீள்குடியேற்றப்பட்ட 5,000 குடும்பங்களுக்கு இலவசமாக வீட்டு மின்வழங்கல் இணைப்பை ஏற்பாடு செய்யவுமாக 105 மில்லியன் ரூபாவினை வழங்க மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க மற்றும் மீள்குடியேற்றம், புனர் நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய கொடி விவகாரம்: பிரதேசசபை முன்னாள் தலைவர் கைது-
கண்டி – யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துஷிதகுமார வலகெதர கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தேசிய கொடியை ஒத்த திரிபுபடுத்தப்பட்ட கொடி போடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் முன்னாள் பிரதேச சபைத் தலைவரை கைது செய்துள்ளனர்.
நாடுகளுக்கு புதிய இராஜதந்திரிகள் நியமனம்-
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எசல வீரகோன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இலங்கையின் பிலிபைன்ஸ் தூதுவராக அருணி ரணராஜாவும், ரஸ்யாவிற்கான தூதுவராக சமன் வீரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.