ரயில்வே ஊழியர்கள் நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு-

madu trainரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரங்களைச் சேர்ந்த ஊழியர்களின் சம்பள குளறுபடிகளுக்கு இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கவில்லை என ரயில்வே தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களிடமிருந்து கிடைத்த பதில் திருப்திகரமானதாக இல்லையென ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெர்னாண்டோ கூறியுள்ளார். ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், கண்காணிப்பு அதிகாரிகள் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்களின் சம்பள குளறுபடிகள் தொடர்பில் கடந்த மூன்று அல்லது நான்கு வருடங்களாக ரயில்வே ஊழியர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்த நிலைமையின் கீழ் புதிய அரசாங்கத்தின் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதற்கமைய அமைச்சின் செயலாளரினால் சம்பள ஆணைக்குழுவின் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்படவுள்ள சம்பளம் தொடர்பில் எழுத்துமூலம் நேற்று அறிவிக்கப்பட்டதாக ரயில்வே தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெர்னாண்டோ குறிப்பிட்டார். ஆயினும் தமக்கு வழங்கப்படவுள்ள சம்பளம் குறித்து திருப்தியடைய முடியாதுள்ளதாகவும் அதன் பிரகாரம் இன்றிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.