கட்சி தாவும் சந்தர்ப்பவாதிகளுக்கு சவுக்கடி கொடுங்கள்-உமாவசந்தன்

voteதாயகத் தமிழ் உறவுகளே சற்று சிந்தித்து செயற்படவேண்டிய தேர்தல் காலம் இது. இன்று தங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கும் பலர் இதற்கு முன் எங்கு இருந்தார்கள் என்பதை சிந்தித்துப்பாருங்கள் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்ட பலர் இன்று மீண்டும் வாக்குக் கேட்டு தங்கள்முன் தோன்றியிருக்கின்றார்கள். இவர்களில் எத்தனைபேர் தன்னைத் தமிழ் மக்களுக்கு அறிமுகபடுத்திய கட்சிக்காக வாக்குக்கேட்டு வந்திருக்கின்றார்கள்?.

தென்னிலங்கை அரசியல் கட்சிகளிடம் பணத்திற்காவும், அற்ப சலுகைகளுக்காகவும், தமது தேவைகளை நிவர்த்தி செய்துகொள்வதற்காகவும் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை விலைபேசி விற்றுவிட்டு மீண்டும் தமது சுயலாபத்திற்காக தமிழர்களின் வாக்குபலத்தை சிதறடிக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ள பேரினவாத சக்திகளால்; மீண்டும் ஒருமுறை தமிழ் சமூகத்தை ஏமாற்றுவதற்காக களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

தேர்தலில் தாம் வெல்லப்போவதில்லையென்று அவர்களுக்கே நன்றாகத் தெரியும் ஆனாலும் தமது எஐமானர்களின் கனவுகளை காப்பாற்றுவதே இவர்களது நோக்கம் இப்படியான பச்சோந்திகளுக்கா நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்கள்? தமிழ்த் தலைவர்களிடத்தில் தவறுகள் இருக்கின்றது அதை நியாப்படுத்துவது எனது நோக்கமல்ல. எமக்கு இன்று இருக்கின்ற ஒரேபலம் வாக்குச்சீட்டு மட்டும்தான். அதையும் நாம் இழந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கவேண்டும்.

தவறுசெய்கின்ற தலைவர்களை தட்டிக்கேளுங்கள். இன்று அதற்கான சந்தர்ப்பம் உங்களை தேடிவந்திருக்கின்றது. வாக்கு கேட்டுவரும் ஒவ்வொரு தலைவர்களிடமும் உங்களது அன்றாட அடிப்படைத் தேவைகள் சந்தேகங்கள் அரசியல் பிரச்சினைகளுக்கு தெளிவான விளக்கத்தைக் கேளுங்கள். யார் உங்களுக்கு சரியான தெளிவை ஏற்படுத்துகின்றார்களோ அவர்களுக்கு வாக்களிப்பது உங்களது கடமை. கட்சித்தாவல்களை மாத்திரம் தமது கொள்கையாக நினைக்கும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி கொடுங்கள்.

கடந்த காலங்களில் தமிழ்மக்களால் தமது தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்படாத சிலர் இன்று பேரினவாத கட்சிகளை தோளில் சுமந்துகொண்டு நாங்கள் உங்களுக்கு வங்கிகளில் கடன் பெற்றுத்தருகிறோம், காணிகள் தருகிறோம், வேலைவாய்ப்பு பெற்றுத் தருகிறோமென வீடுவீடாகச் சென்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றார்கள். இது நடைமுறைச் சாத்தியமானதா?

தேர்தல் காலங்களில் மாத்திரம் தோன்றும் இவர்களால் இதை சாதிக்க முடியுமா? சொல்லொணாத் துயரங்களில் வாடும்போது வராதவர்கள் இன்று தேர்தல் வந்தவுடன் மக்களின் துயர்துடைக்க வந்த தேவதூதர்கள்போல் நாடகமாடுகின்றார்கள். இவர்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம். அதுபோலதான் இவர்களின் கதையும். நன்றி.
          வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.    உமாவசந்தன்