தேர்தல் சட்டமீறல்கள் பற்றிய 732 முறைப்பாடுகள் பதிவு-
தேர்தல் சட்டமீறல்கள் குறித்து இதுவரையில் 732 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அதிகப்படியாக 122 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலக முறைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 44 முறைப்பாடுகளும், கம்பஹா மாவட்டத்தில் 31 முறைப்பாடுகள் குருநாகல் மாவட்டத்தில் 39 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இதனிடையே தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்ட பதவி உயர்வுகள் புதிய நியமனங்கள் என்பன குறித்து கிடைத்துள்ள முறைப்பாட்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் முறைப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த விடயங்கள் குறித்து 164 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன இதேவேளை சட்டவிரோதமாக தேர்தல் பிரசார சுவரோட்டிகள் ஒட்டுகள் மற்றும் பதாகைகள் காட்சிப்படுத்தல் என்பன குறித்து 156 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாடு பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள்மீது சூடு, பெண் பலி, 11பேர் காயம்-
கொழும்பு கொட்டாஞ்சேனை புளுமெண்டல் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ரவி கருணாயக்கவின் ஆதரவாளர்கள் சிலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் காயமடைந்த 11 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க கூறுகின்றார். இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகின்றது. நவீன ரக காரொன்றில் வருகைதந்த சிலர் இன்று முற்பகல 11.45 அளவில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்பின் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மஹிந்த வரைமுறையினை மீறுவதாக பிரதமர் ரணில் தெரிவிப்பு-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழமைக்கு மாறாகவே தேர்தலில் போட்டியிடுகிறார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ தமக்கு பிரதமர் பதவி வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிபால கூட்டமைப்பில் பிரதமர் வேட்பாளர் யாரும் இல்லை. மஹிந்வை பிரதமராக்க முடியாது அவரால் வெற்றிப்பெற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் வரைமுறைகளை மீறியே மஹிந்த தேர்தலில் போட்டியிடுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதேவேளை தேர்தலுடன் தொடர்புடைய சட்டமீறல்கள் தொடர்பில் 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேர்தல் சட்டமீற்ல்கள் தொடர்பில் 89 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. குறித்த சுற்றி வளைப்பின் போது 212 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் தேர்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அடுத்து 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுத் தேர்தல் தொடர்பில் இத வரை 100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்கவின் வாகனம் பறிமுதல்-
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பீ. ரத்நாயக்கவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் ஒன்று இன்றுமுற்பகல் 10.30மணியளவில் ஹட்டன் பொலிஸாரினாரல் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வாகனம் ஹட்டன் மல்லியப்பு சந்தி அருகில் நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சந்தர்தர்ப்பத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தில் சீ.பீ. ரத்நாயக்கவின் புதல்வரும் சாரதியும் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களுடன் தொடர்புடைய வேட்பாளர் இல்லாமல் இருந்த காரணத்தினாலேயே வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஸ்டிக்கர்களை அகற்றிய பின்னர் வாகனத்தை மீண்டும் சீ.பீ.ரத்நாயக்கவின் புதல்வரிடம் கையளித்துள்ளனர்.
யாழில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நால்வர் கைது-
யாழ். சாவகச்சேரி நகரில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் நால்வர் இன்று நண்பகலில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீதிக்குப் புறம்பான முறையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதால் குறித்த நால்வரையும் கைதுசெய்ததாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் தமிழ் தேசிய முன்னணியில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் செல்வராஜா கஜேந்திரனின் ஆதரவாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
சாதனை பெற்ற மாணவி கமலினி கௌரவிப்பு, பரிசில்கள் வழங்கி வைப்பு-(படங்கள் இணைப்பு)-
யாழ். வட்டு மத்திய கல்லூரி மாணவி செல்வி. ம. கமலினி மாகாண மட்டத்தில் நடந்த மெய்வல்லுனர் போட்;டியில் 100மீ 200மீ நீளம்பாய்தல் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி தங்கப்பதக்கம் வென்றுள்ளதுடன் நீளம்பாய்தல் போட்டியில் புதிய சாதனை ஒன்றையும் பதிவு செய்துள்ளார். எனவே இம் மாணவியின் சாதனையை பாராட்டி கல்லூரி சமூகத்தினாலும் ஊர்மக்களினாலும் பழைய மாணவர்களாலும் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினாலும் இம் மாணவியின் சாதனையை கௌரவிக்கும் முகமாக 29.07.2015அன்று பங்குறு வைரவர் ஆலயத்திலிருந்து அழைத்துவரப்பட்டு பாடசாலை விழா மண்டபத்தில் வைத்து கௌரவிப்பு இடம்பெற்றது. அத்துடன் இம் மாணவியினால் இதுவரை காலமும் வெற்றிபேற்ற பதக்கங்களும் சான்றிதழ்களும் விழா மேடையில் பார்வைக்கு வைக்கப்பட்டது. இம் மாணவிக்கு பரிசில்கள் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.