Header image alt text

ஒற்றையாட்சிக்குள் நியாயமான அதியுச்ச அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாது-தர்மலிங்கம் சித்தார்த்தன்-

Captureஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய வகையிலான நியாயமான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாதென புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணி ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்குள் 13ஆம் திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு எனவும் குறிப்பிட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டு பிரதான கட்சிகளும் ஒற்றையாட்சிக்குள் தீர்வென்றே குறிப்பிட்டு வருகின்றன. ஒற்றையாட்சிக்குள் 60 ஆண்டு காலமாக புரையோடிப்போயிருக்கும் இனப் பிரச்சினைக்கான தீர்வை எட்டமுடியாது என்பது வெளிப்படையானது. அதேநேரம் ஒற்றையாட்சிக்குள் 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுவதென்பதும் சாத்தியமற்ற விடயம். குறிப்பாக கடந்த காலங்களில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வடமாகாண சபைக்கு மறுக்கப்பட்ட நிலையில் ஏனைய அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத் தரப்பின் தலையீடுகள் அதிகமாகக் காணப்பட்டன.

Read more

எமது குடியேற்றக் கிராமங்களில் இதுவரை காலமும் அபிவிருத்தி பணிகள் புறக்கணிக்கப்பட்டது ஏன்? மக்களே சிந்தியுங்கள்…
  முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்)

mohanஎமது அமைப்பின் ஆரம்பகாலம் முதல் இன்றுவரையான காலப்பகுதியில், எமது குடியேற்ற கிராமங்களின் நிலை குறித்து, வவுனியா மாவட்ட இணைப்பாளர் என்ற வகையில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியத்துடன், மக்கள் மீது அக்கறை உள்ளவன் என்ற வகையில் இதனை எழுதுகிறேன்.

எமது அமைப்பிற்கு 15 வருட காலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் எதுவும் அற்ற நிலையில் எங்களால் இயன்ற பணிகளை மக்களுக்கு வழங்கியவன் என்ற நிலையில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில், வன்னி (வவுனியா, மன்னார், முல்லைத்தீவு) தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில், வீட்டுச் சின்னத்தில் இலக்கம் 4இல் போட்டியிடும் எமது அமைப்பின் ஒரே ஒரு வேட்பாளரான கந்தையா சிவநேசனை வெற்றிபெற செய்வதன் மூலம் கிராமங்களை துரித அபிவிருத்தி பாதையில் கொண்டுசெல்ல உங்கள் வாக்கை வீட்டுச் சின்னத்தில் இலக்கம் 4ற்கும் இட்டு எமது அமோக வெற்றியை உறுதிப்படுத்துங்கள்.

Read more

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் பலி-

raviகொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளுமெண்டல் பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார். இலக்கத்தகடற்ற கறுப்பு நிற ஹைப்ரிட் கார் மற்றும் வெள்ளை வேன் ஆகியவற்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் புளுமெண்டல் – பெனடிக் படசாலையின் மைதானத்துக்கு முன்னால் உள்ள பாதையில் வைத்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இதில் பெண்ணொருவர் நேற்று பலியானதுடன் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களின் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருந்தநிலையில்; ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

கொம்மாதுறை வாகன விபத்தில் ஆசிரியை உயிரிழப்பு-

teacherமட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் கொம்மாதுறை என்னுமிடத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை பாலசுப்பிரமணியம் சதுக்கத்தைச் சேர்ந்த கலையரசி பாலச்சந்திரன் (வயது 58) எனும் ஐயங்கேணி தமிழ் வித்தியாலய ஆசிரியையே விபத்தில் பலியானவர் என்று செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. வழக்கம் போல் குறித்த ஆசிரியை சனிக்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் நெடுஞ்சாலையின் ஓரமாக உடற்பயிற்சிக்காக சென்று கொண்டிருந்த போது வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எதிரே வந்த கென்ரர் ரக வாகனம் எனது மனைவியை மோதிவிட்டு தப்பிச்சென்றது என கொல்லப்பட்ட ஆசிரியையின் கணவர் பாலச்சந்திரன் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தலையிலும் காலிலும் காயம்பட்டு வீதியில் வீழ்ந்த ஆசிரியை உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் அவரின் உயிர் பிரிந்துள்ளது.

துமிந்த ஆதரவாளர்கள்மீது வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலி-

accidentஅநுராதபுரம் ரபேவ பகுதியில் பொலிஸ் தலைமை கண்காணிப்பு அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற வேன் ஒன்றில் அடிபட்டு 22வயதான இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் 05 பேர் காயமடைந்துள்ளனர். அநுராதபுரம் ரபேவ பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் ஆதரவாளர்கள்மீதே குறித்த வேன் மோதியுள்ளது. மதவாச்சியில் இருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற வேன் இவர்கள் மீது மோதிக் கொண்டு சென்றதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த 04 ஆண்கள் உட்பட பெண்ணொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களில் இருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வேனை ஓட்டிச் சென்றவர் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் தலைமை கண்காணிப்பு அதிகாரி என்பதுடன் மிஹிந்தலை பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

அங்கவீனர்களை தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்த நடவடிக்கை-

paffrelபொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் அங்கவீனமுற்றவர்களையும் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு குறிப்பிடுகின்றது. குறிப்பாக அங்கவீனமுற்றவர்கள் தொடர்பில் சமூகம் கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறுகின்றார். இதுதவிர அவர்களின் அரசியல் ரீதியான உரிமைகளை உறுதிசெய்வதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். முதல்கட்டமாக மொனராகலை மாவட்டத்தில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ள சகல வாகனங்களிலும் அங்கவீனர்களை இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும், ஏனைய பிரதேசங்களிலும் அங்கவீனர்களை தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 290 சந்தேகநபர்கள் கைது-

election violenceஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய சட்டமீறல்கள் தொடர்பில் 290 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து இதுவரை 215 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய 732 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. சட்டவிரோத நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் தொடர்பிலேயே அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோத நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் குறித்து 164 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்திற்கு பதிவாகியுள்ளன. இதுதவிர பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்கள் காட்சிப்படுத்தல் குறித்து 156 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. Read more