சந்திரிக்கா எப்போதும் நல்லவர்களுடனேயே இருப்பார்-அர்ஜூன-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நாட்டை மேலும் சரியான வழியில் இட்டுச்செல்ல, நல்லாட்சி குழுவினருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட தேர்தல் செற்பாட்டு அலுவலகத்திற்கு சந்திரிக்கா விஜயம் செய்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தற்போது தேர்தல் நல்லவர்கள் மற்றும் கெட்டவர்களுக்கு இடையில் நடைபெறுகின்றது. அதாவது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு இடையில் தேர்தல் இடம்பெறுகின்றது. விஷேடமாக சந்திரிக்கா அம்மையார் எப்போதும் நல்லவர்களுடனேயே இருப்பவர். வேறு விதத்தில் கூறுவதாயின் அவர் எப்போதும் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர். இன்று நல்லாட்சி அரசாங்கம் இருப்பது அவரது தலைமையில், மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்குவதில் முதன்மையாக செயற்பட்டவர் அவரே. இன்றுவரை நாட்டை சரியான வழியில் இட்டுச் செல்ல நல்லாட்சி அரசாங்கத்துடன் அவர் உள்ளார். அவரது ஆசிர்வாதம் எப்போதும் எங்களுக்கு உண்டு என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுன்னாகம் ஐ.தே.கட்சி அலுவலகம்மீது தாக்குதல்-
யாழ். சுன்னாகத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் வைத்திய கலாநிதி இ.சிவசங்கரின் அலுவலகம், இன்று இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இன்றுஅதிகாலை 2.30 மணியளவில் இவ் அலுவலகம்மீது தாக்குதல் நடாத்தியவர்கள், அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த வேட்பாளரின் பெயர்ப் பலகையின் ஒரு பகுதியை எரித்துள்ளனர். அத்துடன், வேலியை சேதப்படுத்தி, அலுவலகத்தில் இருந்த மின்குமிழ்களையும் நொறுக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வருகைதந்த சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சீ.சீ.டி.வி கமராப் பதிவுகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு வட்டு இந்து வாபலிபர் சங்கம் உதவி-
மணல் ஒழுங்கை பருத்தித்துறையில் வசிக்கும் மேரி nஐயாற்றிஸ் கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடுப்பின்கீழ் இயங்கமுடியாத நிலையில் வசித்து வருகின்றார். இவர் சில நாட்களுக்கு முன்னர் வட்டு இந்து வாலிபர் சங்கத்துடன் தொடர்பு கொண்டு தனக்கு கட்டில் வாங்கி தரும்படி விண்ணப்பித்திருந்தார் அவ் விண்ணப்பத்திற்கு அமைவாக நேற்றைய தினம் அவருக்கு அவரது இல்லத்தில் வைத்து கட்டில் ஒன்றை வழங்கியிருந்தோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)
மாகாணசபை அமைச்சர் பிரமித பண்டார கைது-
மத்திய மாகாண சபை அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தம்புள்ளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். கடந்த 31ம் திகதி குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் கைதான பிரமித பண்டார தென்னக்கோனை தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
மூன்று மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு-
வைத்திய கலாநிதி நவரட்ணம் (லண்டன்) அவர்களால் கல்வியில் ஆர்வம் உள்ள மூன்று மாணவர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்க தலைமை காரியாலயத்தில் வைத்து துவிசக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
ஆறுமுகன் தொண்டமான் தொடர்பில் பிரதமர் கேள்வி-
ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடனா அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடான இருக்கின்றார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என, பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதியுடன் யார் வேண்டுமானாலும் தேநீர் அருந்தலாம் அதற்கு தடை இல்லை, தேநீர் அருந்துபவர்கள் சொல்வதெல்லாம் உண்மையாகாது எனவும் சம்பள பேச்சுவார்த்தை தொடர்பாக ஒரு சிலர் கூறுகின்ற கருத்துகளை பெருந்தோட்ட மக்கள் கணக்கெடுக்க வேணடிய தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.