தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) பிரித்தானிய கிளையின் தமிழ் மக்களுக்கான விசேட வேண்டுகோள்!

PLOTEvலண்டனில் வசிக்கின்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (02.08.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை கிழக்கு லண்டன் ஈஸ்ட்ஹாம் பகுதியில் நடைபெற்றது. நீண்ட காலத்திற்குப் பிறகு இடம்பெற்ற இந்த விசேட சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பற்றியும் இதிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதோடு, இத்தேர்தலிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வெற்றிபெறச் செய்ய வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக வாக்களிப்பு வீதத்தினை அதிகரிக்கச் செய்வதற்கான முனைப்புக்களை மேற்கொள்வது தொடர்பில் இச்சந்திப்பின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதாவது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களை வாக்களிக்கச் செய்வதற்கான முயற்சிகளை அனைவரும் எடுக்க வேண்டுமன்றும் அதற்கு தாம் முழு முயற்சிகளை எடுப்பதாகவும் சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் கூறினார்கள். 

அத்துடன் எதிர்காலத்தில் கழகத்தின் பிரித்தானியக் கிளையுடன் புலம்பெயர் உறவுகள் இணைந்து நாட்டில் பல்வேறு அபிவிருத்திகள் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள், சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் என்வனவற்றை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது மிகவும் விரிவாகப் பேசப்பட்டது. இந்த சந்திப்பின் இறுதியிலே தமிழ் மக்களுக்கான விசேட வேண்டுகோள் ஒன்றும் விடுக்கப்பட்டது. அந்த வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாவன, 

தமிழ் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களது அபிலாசைகளை பிரதிபலித்து நிற்கும் ஒன்றுபட்ட ஜனநாயக அமைப்பாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் அரசியல் சக்தியினது உறுதிமிக்க கட்டமைப்பும், அதீத அரசியல் பலமுமே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கவல்லது. ஆகவே தற்போதைய சர்வதேச சாதகச் சூழிலில் அனைவரும் ஒன்றுபட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை மேலும் பலப்படுத்துவதில் உறுதியுடன் செயற்பட வேண்டும்.

• வாக்களிக்கும் உரிமையை உதாசீனம் செய்யாமலும், வாக்களிக்கத் தயங்காமலும் தமிழ் மக்கள் தமது முழுமையாக வாக்குகளைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் தமிழர் தேசியத்தின் பிரதிநிதித்துவம் பலமானதொன்றாக அமைய வழிசெய்வது சமகாலத்தில் முதன்மையான கடமையாகும். எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களித்து தமிழர்கள் ஒரு கண்ணியமான நேர்மையான அரசியலையே நாடி நிற்கின்றார்கள் என்பதை நிரூபித்துக் காட்டவேண்டும்.

• தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பெறப்படும் தமிழ்ப் பிரதிநிதித்துவங்கள் பேரினவாத அரசியல் தலைமைகளால் சூழ்ச்சிகரமான முறையில் கையாளப்படுவதோடு, இனப்பிரச்சினை தீர்வு இழுத்தடிக்கப்பட்டு, தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கும் சக்திகள் பலவீனப்படுத்தப்படும் என்பதை உணர்ந்து அவ்வாறான சக்திகளை தமிழ் மக்கள் புறந்தள்ள வேண்டும்.

• முதலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு புள்ளடியிட்டு, யாழ் மாவட்டத்திலே உங்கள் விருப்பு வாக்குகளில் ஒன்றினை புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் இலக்கம் 7 ற்கும்,

வன்னி மாவட்டத்தில் உங்கள் விருப்பு வாக்குகளில் ஒன்றினை கழகத்தின் வன்னி பிராந்திய அமைப்பாளரும், மத்தியகுழு உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமான கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களின் இலக்கம் 4 ற்கும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உங்கள் விருப்பு வாக்குகளில் ஒன்றினை ஆசிரியர் திரு. எஸ்.எஸ் அமல் என்கிற சதாசிவம் வியாளேந்திரன் அவர்களின் இலக்கம் 7 ற்கும் புள்ளடியிட்டு அவர்களும் உங்கள் தெரிவுகளில் ஒருவராக இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்து உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.

நன்றி,

இவ்வண்ணம்,

திரு. தயா
பிரித்தானிய கிளை சார்பாக,
03.08.2015.