ரூபவாஹினி தலைவராக ரவி ஜயவர்த்தனவை நியமிக்க ஏற்பாடு-

raviஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன புதிய தலைவராக ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்றுமாலை ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஷரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட சோமரத்ன திஸாநாயக்க பதவி விலகியதை அடுத்து அப்பதவிற்கு ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். சட்டத்தரணியான ரவி ஜயவர்த்தன, முன்னாள் ஹொரண ஐதேக தொகுதி அமைப்பாளராக செயற்பட்டவர். ஐதேக தலைமையுடன் இடம்பெற்ற முறுகலை அடுத்து அவர் பதவி விலகியிருந்தார். சிறைச்சாலை ஆணையாளராக கடமையாற்றியுள்ள ரவி ஜயவர்த்தன, புதிய அரசாங்கம் பதவியேற்ற பின் ரூபவாஹினி கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

டிபென்டர் வாகனத்தில் ஆயுதங்களுடன் பயணித்த அறுவர் கைது-

defender 01கொழும்பு மாளிகாவத்தை கெத்தாராமைக்கு அண்மையில் இன்று அதிகாலை வீதிச்சோதனை சாவடியை அமைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வெள்ளை நிற டிஃபென்டர் ரக வாகனத்தை கறுப்பு நிறத்திலான இறப்பர் சீட்டினால் மூடி அதற்குள் மறைத்துவைத்து ஆயுதங்களை கடத்திய அறுவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த வாகனத்துக்குள்ளிருந்து இரண்டு கைக்கோடரிகள், அகலக்குழாய்கள், இரும்பு மற்றும் அலுமினிய குழாய்கள் இரண்டு, கத்தி ஒன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தாங்கள் களனியைச சேர்ந்தவர்கள் என்றும் கொழும்பில் உள்ள விருந்தகமொன்றுக்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 350 பேர் கைது-

election violenceபாராளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய சட்டமீறல்கள் குறித்து சந்தேகநபர்கள் 350 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது தேர்தல் சட்டமீறல்கள் குறித்து இதுவரை 268 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பாராளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய 892 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்திற்குப் பதிவாகியுள்ளன. சட்டவிரோத நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் போன்ற சம்பவங்களே அதிகளவில் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாடுகளை ஏற்கும் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் 166 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொதுத்தேர்தலின் பிரசார நவடிக்கைகளின் போதான சுவரொட்டிகள். மற்றும் கட்டவுட்களை காட்சிப்படுத்தும் சம்பவங்கள் குறித்து 190 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்திற்குப் பதிவாகியுள்ளன. பொருட்களை பகிர்ந்தளித்தல் தொடர்பாகவும் 124 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அரச சொத்துகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளதாக 106 முறைப்பாடுகளும், அரசாங்க ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய 93 சம்பவங்களும் தேர்தல்கள் செயலகத்திற்குப் பதிவாகியுள்ளன.

மனித உரிமை ஆணைக்குழுவில் ஜேவிபி வேட்பாளர் முறைப்பாடு-

JVPமக்கள் விடுதலை முன்னணியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் சமந்த கொரளேஆராச்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். கடந்த வாரம் தன்னை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்ததன் மூலம் தனது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சமந்த முறையிட்டுள்ளார். மனுவின் பிரதிவாதிகளாக சிலாபம் வைத்தியசாலை பணிப்பாளர் தினுஷா பெனாண்டோ, சிலாபம் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வர் பெயரிடப்பட்டுள்ளனர். சிலாபம் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 30ம் திகதி சமந்த கொரளேஆராச்சி மற்றும் பெண் ஒருவர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அரச வாகனங்களை உடனடியாக ஒப்படைக்குமாறு அறிவுறுத்தல்-

mahindaமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உத்தியோகபூர்வ அரச வாகனங்களை உடனடியாக கையளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பணித்துள்ளார். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் பொலிஸார் அதனை கைப்பற்றுவர் எனவும், அதற்கு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். கட்சி செயலாளர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபருடன் இன்று நடத்தப்பட்ட சந்திப்பின் போது தேர்தல்கள் ஆணையாளர் இவ்வாறுக் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.க ஆதரவாளர்கள் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச்சூடு-

stfஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட வேட்பாளரின் தேர்தல் சுவரொட்டிகளை கொண்டுச்சென்ற வாகனத்தின்மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நேற்றுஇரவு இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினரின் கட்டளையை மதிக்காது, குறித்த வாகனம் பயணித்ததையடுத்து பன்னல, வில்கெதர பிரதேசத்தில் வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

லக்ஷமன் வசந்த பெரேராவுக்கு விளக்கமறியல்-

vasantha pereiraமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் வசந்த பெரேரா எதிர்வரும் ஓகஸ்ட் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட லக்ஷமன் வசந்த பெரேரா இன்றுகாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் கைது செய்யப்பட்டார். பின்னர் மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவர் எதிர்வரும் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

புனானை பஸ் விபத்தில் 35 பேர் காயம்-

accidentமட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனானை பிரதேசத்தில் வைத்து பஸ் வண்டியொன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 35 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு 11.30 அளவில் காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் சென்ற தனியார் பஸ் ஒன்று டயர் வெடித்ததில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் பொலனறுவை வைத்தியசாலை மற்றும் வாழைச்சேனை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுமூகமான முறையில் தபால்மூல வாக்களிப்பு-

caffeநாடாளுமன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமூகமான முறையில் நடைபெற்தாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே அமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமூகமான முறையில் நடைபெற்தாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார். மேலும், நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அஹமட் மனாஸ் மக்கீன் மேலும் தெரிவித்துள்ளார்.