தமிழ் தேசியக் கூட்டமைப்பின யாழ் மாவட்ட வேட்பாளர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உதயனுக்கு வழங்கிய செவ்வி-


03-page-001

 

யாழ்ப்பாணத்தில் ரி-81 ரக வெடிக்காத ஷெல்கள் மீட்பு-

shellயாழ். அரியாலைக்கு அண்மித்த கடல் சிறு தீவுப் பகுதியில் இருந்து பழைய வெடிக்காத ரி-81 ரக ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கடற்பரப்பில் நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அப்பகுதியில் புதைகுழிக்குள் குறித்த ஷெல்கள் இருப்பதைக் கண்டு யாழ் போக்குவரத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். யாழ். பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடி படையினரும் இணைந்து குறித்த ஷெல்களை மீட்டுள்ளனர். அதில் 35 ஷெல்களின் மருந்துகளை மீனவர்கள் எடுத்துள்ளதாக கூறப்படுவதோடு, மிஞ்சிய 4 ஷெல்களையும் பாதுகாப்பு தரப்பு வெடிக்கச் செய்துள்ளனர். வெடி மருந்துகள் எடுக்கப்பட்ட ஷெல்களையும் பாதுகாப்பு தரப்பினர் அழித்துள்ளதுடன், குறித்த ஷெல்களை வைத்திருந்தவர் யார் என்ற விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குமாகாண முன்னாள் முதல்வர் பிணையில் விடுதலை-

chief formerகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளருமாகிய நஜீப் அப்துல் மஜித் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பிரதேச செயலக அலுவலகத்தில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்றபோது அங்கு அத்துமீறி நுழைந்ததாக கூறியே இவர் கைதாகியுள்ளார். மேலும் இவருடன் மற்றுமொரு ஆதரவாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை திருகோணமலை நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய துணைவேந்தர்கள் நியமனம்-

campusகொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களுக்கான புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய துணைவேந்தர்களுக்கான நியமனக்கடிதங்கள், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் லக்ஷ்மன் திஸாநாயக்கவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் உபுல் திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனையில் ஒருவர் வெட்டிக் கொலை-

murderகொழும்பு கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த நால்வரே இதனைச் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். மேலும் சந்தேகநபர்கள் பயணித்த முச்சக்கரவண்டியை குறித்த இடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது

பயணப்பைக்குள் பெண்ணின் சடலம் தொடர்பில் ஒருவர் கைது-

murderபயணப் பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு – புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பகுதியில் அநுராதபுரம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கிடந்த பயணப் பையினுள் இருந்து அண்மையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டவர் யாழ் – வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதான ரெங்கன் கார்த்திகா என இனங்காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபர் மன்னார் – கோவில்குளம் பகுதியில் வைத்து குற்றத் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 44வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 438பேர் கைது-

election violenceபொதுத் தேர்தல் பிரசாரப் பணிகளின்போது இடம்பெற்ற தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 438 ஆக அதிகரித்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை தேர்தல் சட்டமீறல்களுடன் தொடர்புடையோரை கைதுசெய்வதற்காக 143 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சுற்றிவளைப்புக்களின்போது 345 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தவிர தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 179 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த முறைப்பாடுகள் தொடர்பில் 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் செயலகத்திறக்கு இதுவரை 892 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தேர்தல் தொடர்பில் 961 முறைப்பாடுகள் பதிவு-

paffrelநாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவித்தது முதல் இன்றுவரை தேர்தல் தொடர்பான 961 முறைப்பாடுகள் கிடைத்ததாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது கிடைத்த முறைப்பாடுகளில் 74 முறைப்பாடுகள் வன்முறை சம்பவங்கள் தொடர்பானவை என்றும் 887 சம்பவங்கள் தேர்தல் சட்டவிதிகளை மீறியவை என்றும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பரப்புரை நடவடிக்கைகள் தொடர்பில் 490 முறைப்பாடுகளும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் 3 முறைப்பாடுகளும், சொத்து சேதம் மற்றும் பரப்புரை தொடர்பான 40 முறைப்பாடுகளும், தாக்குதல் தொடர்பாக 31 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-

campusஅரச பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு , கோட்டை, உலக வர்த்தக மைய கட்டிடத்துக்கு முன்னால் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தனியார் மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலங்கையில் மருத்துவ பயிற்சி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் விசேட அறிக்கை-

chandrikaபுதிய தேசமொன்றை கட்டியெழுப்புவதற்காக கிடைத்த பெறுமதிமிக்க சந்தர்ப்பத்தை இல்லாதொழிப்பதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக முயற்சிகளை மேற்கொள்ளும் சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கட்சியை பாதுகாக்க வேண்டுமாயின் முதலில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டியுள்ளதாகவும் ஜனவரி 8 ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியை பாதுகாப்பது மிக முக்கியமான விடயமாகும் எனவும் அவர் தனதறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்பிரகாரம் ஜனவரி 8ஆம் திகதி நாட்டில் புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதற்காக பங்காற்றிய அனைத்து சக்திகளுடனும் ஒன்றிணைந்து அனைத்து தரப்புகளினதும் பங்களிப்புடன் வேறுபாடுகளை புறந்தள்ளி பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை பாதுகாத்தல் அர்ப்பணிப்பு செய்துள்ள சக்திகள் மற்றும் தலைமைதுவங்களுடன் ஒன்றிணையுமாறு சிறீங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து ஆதரவாளர்களிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிகார மோகத்தினாலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியும் சமூகத்தில் விஷம் கலக்கின்ற சக்திகளை தோற்கடித்தல் நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாததாகும் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். நல்லாட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காக ஜனவரி 8 ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியை முன்நோக்கி கொண்டு செல்லக்கூடிய பண்பாடுள்ள மக்கள் பிரதிநிகளை மாத்திரம் தெரிவுசெய்வதற்கும் பாராளுமன்றத்தை மக்களின் கௌரவமான அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற ஒரு நிறுவனமாக கட்டியெழுப்புவதற்கும் தேர்தலின்போது அனைத்து பிரஜைகளினதும் வாக்குகளை புத்திசாதூரியத்துடன் பயன்படுத்த வேண்டும் என சந்திரிக்கா குமாரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.