பரீட்சைக்கான அனுமதி வழங்காததால் வவுனியா மாணவி தற்கொலை-

wellவவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த 19வயதான மாணவியொருவர் கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை அதிபர் தர மறுத்ததாலேயே அவர் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அவர் கடிதமொன்றையும் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான விசாரணை முடியும் வரையில் குறித்த பாடசாலையின் அதிபர் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் கடந்த ஜூலை மாதம் 06ம் திகதி பரீட்சைகள் திணைக்களத்தினால் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் அவற்றை மாணவர்களுக்கு வழங்குமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார். எனினும் குறித்த பாடசாலையின் அதிபர், மேற்படி மாணவியின் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை மாணவியிடம் வழங்காமல் ஆகஸ்ட் 6ம் திகதிவரை வைத்திருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் விசாரணைகள் முடிவடையும்வரை, குறித்த பாடசாலையின் அதிபரை பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.

15,000 போலி வாக்குச் சீட்டுகள் கந்தளாயில் மீட்பு-

votesதிருகோணமலை கந்தளாய்ப் பகுதியில் சுமார் 15,000 போலி வாக்குச் சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்தே குறித்த வாக்குச் சீட்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். வாக்குச் சீட்டை ஒத்த வடிவில் வடிவமைக்கப்பட்டு பிரதான அரசியல் கட்சியொன்றின் திருகோணமலை வேட்பாளர் ஒருவருக்கு புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 14ஆம் திகதிவரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போலி வாக்குச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.ம. சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து நால்வர் நீக்கம்-

paஊவா மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ், மாகாண சபை உறுப்பினர்களான நிஷாந்த வர்ணசிங்க, நிரோஷா அத்துகோரல மற்றும் ஹிருணிகா பிரேமசந்திர ஆகியோரை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இன்றிலிருந்து நீக்குவதாகவும் அவர்களுக்கான கடிதங்கள் தபாலிடப்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் இந்த தீர்மானம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நிஷாந்த வர்ணசிங்க, நிரோஷா அத்துகோரல மற்றும் ஹிருணிகா ஆகிய மூவரும் சட்டபூர்வமாகவும் தார்மீகமானமுறையிலும் மாகாண சபை உறுப்பினர்களாக செயற்படமுடியாது என்றும் இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் எடுக்கும் முடிவையடுத்து விருப்பு வாக்குகளில் அவர்களுக்கு அடுத்ததாக இருப்பவர்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுசில் கூறியுள்ளார்.

சிலாபம் ரயிலில் வெடிப்பு, ஐ.எஸ்.ஐ.எஸ் பெயர் குறிப்பு-

trainபுத்தளம் சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலொன்றில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்றிரவு 7.20 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வெடிப்பில் காயமடைந்த புகையிரத திணைக்கள ஊழியரொருவர் பாதிக்கப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகையிரதத்தை சுத்திரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் பையொன்று இருப்பதைக் கண்டு அதனை திறந்து பார்த்த வேளையிலேயே இவ்வெடிப்பு இடம்பெற்றுள்ளது. பிளாஸ்டிக் குழாயொன்றே வெடித்துள்ளது. மேலும் அப்பிளாஸ்டிக் குழாயில் ஐ.எஸ்.ஐ.எஸ் என எழுதப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பிளாஸ்டிக் குழாயினுள் வெடிமருந்து மற்றும் இரும்புக் குண்டுகளும் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹிந்த இனவாதத்தை பரப்புகிறார்-பிரதமர்-

ranilமுன்னாள் ஜனாதிபதிக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாமை காரணமாகவே இனவாதத்தை தூண்டுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டியுள்ளார். குருணாகலில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மஹிந்த ராஜபக்ச இனவாத்தை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடுவது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் பிரதமர் எச்சரித்துள்ளார். எவ்வாறாயினும் இனவாதமானது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜிதவின் மகனுக்கு எதிரான வழக்கு வாபஸ்-

rajithaசுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் மகன் எக்சத் சேனாரத்ன, தனது மகளை பலவந்தமாக தடுத்து வைத்துள்ளார் என்று அமைச்சர், அவரது மனைவி மற்றும் மகனுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மேற்படி யுவதியின் தந்தை இன்று வெள்ளிக்கிழமை, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் தெரிவித்துள்ளார். அவரது கோரிக்கையை செவிமடுத்த நீதவான், அக்கோரிக்கையை உறுதிப்படுத்துவதற்காக வழக்கு விசாரணையை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

கைக்குண்டுகள், ஆயுதங்களுடன் எட்டுப்பேர் கைது-

arrestகேகாலை மாவட்டம் ரம்புக்கனை யட்டிவல்தெனிய பிரதேசத்தில் வைத்து கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் எட்டுப் பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பிரதேச அரசியல்வாதியொருவரின் அடியாட்கள் என சந்தேகப்படும் இவர்கள், இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஐ.தே.கவில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர் ஒருவரின் இல்லத்தின் மீது இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் பத்தம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மாவனெல்ல நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.