கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளம்-

passportகடவுச் சீட்டுகளில் விரல் அடையாளத்தைப் பதிவுசெய்யும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கான கடவுச் சீட்டில் விரல் அடையாளம் பதிவுசெய்யப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். 16வயதுக்கு குறைந்தவர்களுக்கான கடவுச்சீட்டில் இந்த நடைமுறை பின்பற்றப்பட மாட்டாது. இதன்பொருட்டு, கொழும்பு பிரதான அலுவலகம் உட்பட மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய பிராந்திய அலுவலகங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்கின்றவர்கள் தமது விரல் அடையாளத்தை வழங்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக குடிவரவு-குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். விரல் அடையாளங்கள் கணனி மயமாக்கப்பட்டு கடவுச்சீட்டுகளில் அடையாளத்தின் பொருட்டு உள்ளடக்கப்படுவற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய பிரஜையிடம் 133 லட்சம் ரூபா மோசடி-

australiaஅவுஸ்திரேலிய பிரஜை ஒருவரிடம் ஒரு இலட்சம் டொலரை (ரூ.133,67822) மோசடி செய்த குற்றச்சாட்டில் சட்டத்தரணியொருவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய பிரஜையொருவர் இலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதி, சட்டத்தரணி மற்றும் மற்றுமொரு நபருடன் இணைந்து நிறுவனம் ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த நிறுவனத்தை முறைக்கேடான முறையில் தன்னுடைய பெயருக்கு எழுதியே சட்டத்தரணி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிறுவனத்தில் உள்ள நபரொருவரினால் அவுஸ்திரேலிய பிரஜைக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக ஏமாற்றியே நிறுவனத்தை சட்டத்தரணி, தன்னுடைய பெயருக்கு எழுத்திவைத்துள்ளதாகவும் அவுஸ்திரேலிய பிரஜை அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் பிரசாரங்களில் பாதாளக் குழுவினர்-

caffeபாதாளக் குழுவினர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் அரசியல்வாதிகளுடன் பாதாளக்குழு உறுப்பினர்களும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டார். கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களிலேயே பாதாளக்குழு உறுப்பினர்களின் நடமாட்டம் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த சூழ்நிலையில், எதிர்வரும் பத்து நாட்களுக்குள் பாதாளக் குழுவினர் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் நிலைமையைத் தடுப்பதன் ஊடாக மாத்திரமே சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்த முடியும் எனவும் கீர்த்தி தென்னக்கோன் கூறினார். இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளில் பாதாளக்குழு உறுப்பினர்கள் தொடர்புபட்டுள்ளமை குறித்து தமது அமைப்பிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

மஹிந்த மீண்டும் வந்தால் சீரழிவுதான் சந்திரிக்கா எச்சரிக்கை-

chandrikaமஹிந்த ராஜபக்ஸ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை சீரழித்து விடுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார். அகலவத்தையில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முன்னாள் ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ நாட்டை சீரழித்ததன் பின்னர், ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலம் நாட்டை மாற்றியமைக்க முடிந்ததாகவும் கட்சியில் ஒரு பகுதியை உடைத்துக்கொண்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ஸ தேர்தலுக்கு வந்துள்ளார் எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குறிப்பிட்டார். மேலும், மஹிந்த ராஜபக்ஸவின் இத்தகைய முயற்சியை தோல்வியடையச் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும்- பிரதமர்-

ranil (5)ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்தும் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தால் விடுதலைப் புலிகள் மீண்டும் உயிர்பெற்றுவிடுவார்கள் என்று மகிந்த தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் இதற்கு வாய்ப்புகள் இல்லை. தேசிய பாதுகாப்பின் பொருட்டு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு அதிகாரிகளுக்கு இடமாற்றம்-

paffrelதிறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சை சேர்ந்த இரு அதிகாரிகளை பொது நிர்வாக அமைச்சுக்கு தேர்தல்கள் செயலகம் இடம்மாற்றியுள்ளது. இந்த இரண்டு அதிகாரிகளும் பொதுத் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் பதவியுயர்வுகள், நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் என்பவற்றை வழங்கியுள்ளனர். இதனாலேயே இவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் 866 இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரினால் 512பேர் கைதாகியுள்ளனர்.

கொழும்பில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யாழுக்கு தப்பியோட்டம்-

gun shootingகொழும்பு கொட்டாஞ்சேனை புளூமெண்டல் பகுதியில் ஜூலை 31ஆம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்துகொண்ட தேர்தல் பிரசார பேரணிமீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்துள்ளதாக யாழ் பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தப்பிவந்த சந்தேக நபர்கள் நால்வரும் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட வடமராட்சி கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. தற்போது, மாதகல் கடல் பகுதியிலிருந்து வடராட்சி கிழக்கு பகுதி வரையான கடலோர மார்க்கங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் வீதித்தடைகளை ஏற்படுத்தி சந்தேகத்துக்கிடமான வாகனங்களை சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் சிங்களவர்கள் மூவருடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவரும் அடங்குகின்றார். செல்வராஜ் கணேசன் (வயது 30), ஆர்.எஸ்.எஸ். சுமர ஹெவத் ஆமி ரனபாத் (வயது 35) ஆர்.ஏ.எஸ்.சீ.செவட்ட சேவத் ஹேவத் புளுமென்ரல் (வயது 37) கே.என்.அன்சன பெற்றும் ஹேவத் உக்குன் ஆகியோரே சந்தேக நபர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பு கொட்டாஞ்சேனை புளூமெண்டல் பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க தனது தேர்தல் காரியாலயத்தை திறந்து பிரச்சார பணி மேற்கொள்ள கொட்டாஞ்சேனை நோக்கி பேரணியாக சென்று கொண்டிருந்தனர். இதன் போது துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் விசாரiணைகளை மேற்கொண்ட கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சந்தேக நபர்கள் விட்டுச் சென்ற தடயப்பொருட்களை மீட்டதுடன், சந்தேகநபர்களையும் இனங்கண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.