தேர்தலை முன்னிட்டு அமெரிக்கா பயண எச்சரிக்கை

Fஇலங்கையில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இம்மாதம் 17ம் திகதி பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் வன்முறைகள் வெடிக்கக் கூடுமென்ற அடிப்படையில் அமெரிக்க அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊடகச் செய்திகளை கவனிப்பதுடன் மிகவும் நிதானத்துடன் செயற்பட வேண்டுமென அமெரிக்கா தமது நாட்டுப் பிரஜைகளிடம் கோரியுள்ளது. இதேவேளை சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்வதற்கும் வாழ்வதற்கும் இலங்கை சிறந்த நாடாக விளங்குவதாகவும் அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு அவுஸ்திரேலிய அரசாங்கமும் ஏற்கனவே தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புளூமெண்டல் துப்பாக்கிச்சூடு, சந்தேகநபர் கைது-

shotகொழும்பு புளூமெண்டல் பகுதியில் கடந்த மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைதடது குற்றப்புலனாய்வு பிரிவினரால் இம்மாதம் 06ம் திகதி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதுடைய உடற்பயிற்சி ஆலோசகராக கடமையாற்றக்கூடியவர் என கூறப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைதுசெய்யவும், இதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கண்டுபிடிப்பதற்காகவும் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முனனெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது சந்தேகநபர்கள் வருகைதந்த வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஐ.தே.கட்சி ஆதரவாளர்களிடையே மோதல், பொலிஸார் துப்பாக்சூடு-

shootingகொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர்களுக்கும், மேல்மாகாண சபை உறுப்பினர் பைஷரூஸ் ஹாஜியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பைஷரூஸ் ஹாஜியாரின் ஆதரவாளர்கள் மீது ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் முஜீபுர் ரஹ்மானின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டதாக மேல்மாகான சபை உறுப்பினர் பைஷரூஸ் ஹாஜியார் தெரிவித்தார். புதுக்கடைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் காரியாலயத்திற்கு வருகைதந்த முஜீபுர்ரஹ்மானின் ஆதரவாளர்கள் தனது வாகனம் மற்றும் தேர்தல் காரியாலயம் மீதும் தாக்குதல் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சம்பவத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக மேல்மாகான சபை உறுப்பினர் பைஷரூஸ் ஹாஜியார் மேலும் தெரிவித்துள்ளார்.