வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்- (படங்கள் இணைப்பு)-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் (10.08.2015)மாலை வவுனியா குருமண்காடு, கலைமகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலே தமிழ்மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்திப் பேசினார்கள். இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், 1990ம் ஆண்டு வவுனியா நகரத்திலிருந்து அனைவருமே துரத்தப்பட்ட நிலையில், அந்நாளிலே இங்த மேடையிலே இருக்கின்ற சிலர் உட்பட நாங்கள் பதுங்கு குழிகளுக்குள் சென்று மக்களை ஒவ்வொருவராக கூட்டிவந்து அவர்களது வீடுகள் வளவுகளில் இருந்த கண்ணிவெடிகள் எல்லாம் துப்புரவு செய்து வீடு வீடாகக் குடியேற்றினோம். அது மாத்திரமன்றி கரையோரக் கிராமம் என்ற ரீதியில் மிகப்பெரியளவில் இரத்தம் சிந்தி பல உயிர்களையும் பலிகொடுத்து இந்த வவுனியாவைச் காப்பாற்றி இன்றைக்கு வவுனியாவை ஒரு தமிழ் நகரமாக வைத்திருக்கின்றோம். இந்தப் பணிகளைச் செய்தவர்களில் சிலரும் இந்த மேடையிலேயே வீற்றிருக்கின்றனர் என்று க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வன்னி மாவட்ட வேட்பாளர் க.சிவநேசன் (பவன்), ஜி.ரி.லிங்கநாதன்(விசு) ஆகியோர் அமர்ந்திருந்த திசையைப் பார்த்தபடி கூறினார்.
அத்துடன், இங்கு போட்டியிடுகின்ற சிலர்;. இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவோம் என்பது உள்ளிட்ட பல வாக்குறுகளையும், ஆசை வார்த்தைகளையும், நடைமுறைச் சாத்தியமன்றவைகளையும் தெரிவித்து வருகின்றார்கள். ஆனால் இவர்கள் கூறுவது போன்று அவற்றைக் கொடுத்துவிடப் போவதில்லை. இங்கு பாரிய பொருளாதார அபிவிருத்திகள் தேவை என்பதுடன், பாரிய நிதியுதவிகளும் வேண்டும். இதை மத்திய அரசாங்கம் செய்ய மாட்டாது. நாங்கள் வெளிநாடுகளிலும் இதுபற்றி பேசியிருக்கின்றோம். நாம் பலமாக இருந்தால் மாத்திரமே இங்கு ஒரு சரியான கட்டமைப்பை அமைத்து அதன் ஊடாக இவற்றைச் செய்யமுடியும். அதனை நாம் செய்வோம் என்று தெரிவித்தார்.