பெரும்பான்மை கட்சிகள் ஆட்சியமைக்க முட்டுக்கொடுப்பது எமது நோக்கமல்ல-புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவிப்பு- (ஆர்.ராம்)

D.Sithadthanபெரும்பான்மைக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு முட்டுக்கொடுப்பது எமது நோக்கமல்ல எனத் தெரிவித்திருக்கும் புளொட் அமைப்பின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான த.சித்தார்த்தன், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு மைல் கல்லாக இந்த பொதுத் தேர்தல் அமைந்துள்ளதென குறிப்பிட்டார்.

நீர்வேலியில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையில் குழப்பகரமான அரசியல் சூழலொன்று காணப்படுகின்றது. இந்த நிலையில் தேர்தல் நிறைவடைந்தவுடன் பெரும்பான்மைக் கட்சிகள் பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையொன்றே பெரும்பாலும் ஏற்படுமென எதிர்வு கூறப்படுகின்றது.

அவ்வாறான நிலையில் தமிழ் தேசியத்தின்பால் உரிமைகளுக்காக எமது மக்களின் ஆணைபெற்று பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மைக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு முட்டுக்கொடுக்காது. நீண்டகாலமாக எமது விடுதலைக்காக நாம் அறவழியிலும், ஆயுதவழியிலும் போராடி வருகின்றோம். 

இந்த நிலையில் பெரும்பான்மைக் கட்சிகள் எமது விடுதலைப் போராட்டங்களை நசுக்கும் நோக்குடனேயே செயற்பட்டு வந்திருக்கின்றன என்பது கடந்தகால நிகழ்வுகளாக இருக்கின்றன.

அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது நல்லெண்ணச் சூழல் உருவானதாக கருதப்படும்போதும் எமக்கு எதிர்பார்த்தளவிலான நன்மையான விடயங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது யதார்த்தமானது. தற்பொழுது அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய தேர்தல் விஞ்ஞானபனமொன்றை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான நாம் முன்வைத்திருக்கின்றோம்.

இதற்குரிய ஆணையை வழங்க வேண்டியவர்களாக தமிழ் மக்கள் உள்ளார்கள். புதிய ஆட்சி மலர்ந்ததன் பின்னர் நடைபெறும் இந்தத் தேர்தல் எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையப்போகின்றது.

அதற்காக இரவோடிரவாக அரசியல் தீர்வைப் பெற்றுவிடுவோமென அர்த்தப்படுத்திவிட முடியாது.

எமது மக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் அளிக்கும் வாக்குகள் பறைசாற்றி நிற்கப்போகின்றன.

அந்த ஜனநாயக பலம் எமது பிரச்சினைகளை சர்வதேசத்தின் சுயநலன்களைத் தாண்டி தீர்ப்பதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தும் என்ற அதீத நம்பிக்கை எமக்குள்ளது.
தற்பொழுது ஜனாதிபதி இந்தத் தேர்தலில் நடுநிலைமை வகிப்பதாகக் கூறினாலும், அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்து அவருடைய கட்சி அமைப்பாளருக்கு மறைமுகமாக வாக்குச் சேகரிக்கும் செயற்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்.

அதேபோன்று பிரதமர் தனது கட்சியை மேம்படுத்தும் வகையிலான உறுதிமொழியை அள்ளி வழங்கியிருந்தார். எது எவ்வாறிருப்பிலும் பிரதான கட்சிகளுக்கு தமிழ் மக்களின் வாக்குகள் செல்லுமாகவிருந்தால் அது அவர்களது கொள்கையை வலுப்படுத்துவதாக அமையுமே தவிர தமிழ் மக்களின் நலன்களை வலுப்படுத்துவதாக அமையாது. ஆகவே, தற்பொழுது ஒரு தீர்க்கமான தருணம் ஏற்பட்டிருக்கின்றது. அதில் உங்களில் தீர்ப்பு உரிமையை வென்றெடுக்கும் தமிழ்த் தேசியத்திற்காக அமையவேண்டும் என்றார். (நன்றி: வீரகேசரி 11.08.2015)