தமிழ் மக்களின் அரசியல் பலத்தை பலவீனமாக்க தென்னிலங்கை சூழ்ச்சி-தர்மலிங்கம் சித்தார்த்தன்-

D.Sithadthanதிட்டமிட்ட குடியேற்றத்தினால் தமிழர் சனத்தொகை வீதத்தினைக் குறைத்து, அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து எமது அரசியல் பலத்தை பலவீனப்படுத்தும் தென்னிலங்கையின் சூழ்ச்சியை முறியடிக்கும் வகையில் எமது வாக்குகளை முழுமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதித்துவத்தை பலமாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் சுதுமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வட, கிழக்கில் தமக்குக் கிடைக்கக்கூடிய ஓரிரு தமிழ்ப் பிரதிநிதிகளை, அவர்களும் தமிழர்களின் பிரதிநிதிகள்தான் என்று உலகிற்குக் காட்டி தேசிய இனப்பிரச்சினைத் தீர்வை இழுத்தடித்து இல்லாமலாக்கும் சிங்களப் பேரினவாத தென்னிலங்கைக் கட்சிகளின் சூழ்ச்சிகர நடவடிக்கைகளுக்கு துணைபோகாமல் தமிழ் மக்களின் உண்மையான குரலாக ஒலிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஓரணியாக வாக்குகளை அளிக்க வேண்டும்.

நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்பதற்காக தென்னிலங்கைக் கட்சிகளுக்கும், சுயேட்சைக் குழுக்களுக்கும் எமது வாக்குகளைச் செலுத்தி வீணடிக்காமல் தமிழர்களின் அரசியல் பலத்தை வலுப்படுத்தவும், உரிமைகளைப் பேரம்பேசி வென்றெடுக்கவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும். 

தென்னிலங்கையில் எந்த ஒரு தேசியக் கட்சியும் பலமானதொரு ஆட்சியமைக்கும் வாய்ப்புக்கள் அரிதாக இருக்கும் இன்றையநிலையில் பாராளுமன்றத்தில் எமது அரசியல் பலத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்.

பரிபூர்ணமான அர்ப்பணிப்பு, சுயநலமற்ற அரசியல்பணி, பண்பட்ட கண்ணியமான அரசியல் தலைமை, நேர்மையான நிர்வாகம், நீண்டகால போராட்ட அனுபவம், பாரபட்சம் அற்ற சமூக மேம்பாடு என்பனவற்றை நடைமுறையிலும் கைக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களே எமது தெரிவாக இருக்கவேண்டும்.

தமிழ் தேசியத்தையும், தமிழர் தேசியத்தின் அரசியல் விழிப்புணர்வையும் பரிசோதனைக்குள்ளாக்கும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும். இதன்மூலம் எமது நீண்டகால இனப்பிரச்சினைக்கு விரைவாக தீர்வை எட்டமுடியும் என்றார்.