தமிழ் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக ஆதரித்து வெற்றிபெறச் செய்வோம்-அனந்தி சசிதரன்-(படங்கள் இணைப்பு)
யாழ். புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து நேற்றுமாலை 6.30மணியளவில் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வட மாகாணசபை உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இவர்களுடன் வலிமேற்கு சமூக மேம்பாட்டுக் கழக ஆலோசகர் டேவிட், முன்னைநாள் சீமெந்து கூட்டுத்தாபன ஊழியர் கேதீஸ்வரநாதன், முன்னைநாள் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.இங்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் உரையாற்றும்போது, தமிழ் தேசியத்தை வலியுறுத்தியதுடன், தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமோகமாக வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அத்துடன் பரிபூர்ணமான அர்ப்பணிப்பு, சுயநலமற்ற அரசியல்பணி, பண்பட்ட கண்ணியமான அரசியல் தலைமை, நேர்மையான நிர்வாகம், பாரபட்சம் அற்ற சமூக மேம்பாடு என்பனவற்றை நடைமுறையிலும் கைக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை எங்களுடைய பிரதிநிதிகளாக தெரிவுசெய்வது எங்கள் அனைவரினதும் கடமையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.