தேர்தல் முடிவுகள் இரு கட்டங்களாக வெளியாகும்-தேர்தல் செயலகம்-

electionஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. முதலில் தபால்மூல வாக்கு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. அதனையடுத்து, தொகுதிவாரியாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது. இதன் பிரகாரம், இம்முறை தேர்தலின் முதலாவது தபால்மூல வாக்கு முடிவை இரவு 11 மணிமுதல் நள்ளிரவுக்குள் வெளியிட முடியும் என்றும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தொகுதி வாரியான தேர்தல் முடிவுகள் தேர்தல் தினத்திற்கு மறுநாள் அதிகாலை முதல் வெளியிடப்படும் என்றும் தேர்தல்கள் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.மேலும் செய்திகளுக்கு

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக தகவல் கருமபீடம்-

parliamentஎதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் வசதிக்காக தகவல் கருமபீடமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23, 24, 25 ஆம் திகதிகளில் மு.ப. 9.30 முதல் பி.ப. 3.30 வரை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்த தகவல் கருமபீடம் நடத்தப்படும் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான தகவல்களையும் ஆவணங்களையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதனால், இந்த நாட்களில் தவறாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் புதிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையும் அன்று இடம்பெறும் எனவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க அனுமதி-

highwayநாளை மறுதினம் 17ம் திகதி நாட்டில் உள்ள கொழும்பு கட்டுநாயக்க அதிவேகப் பாதை மற்றும் தெற்கு அதிவேகப் பாதை உட்பட அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்கலாம். வாக்காளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் டி.ஸீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பாதுகாப்புக் கடமையில் 75 ஆயிரம் பொலிஸார்-

policeஎதிர்வரும் பொதுத் தேர்தலின் பொருட்டு பாதுகாப்புக்கான விசேட நடவடிக்கை அமுலாக்கப்பட்டுள்ளது. இந்தமுறை தேர்தலுக்காக 75 ஆயிரம் காவற்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 629 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அநுர, சுசில் பிறேம்ஜயந்த ஆகியோரது கட்சி உறுப்புரிமை பறிப்பு-

susilசிறீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் கட்சி உறுப்புரிமை தடை செய்யப்பட்டுள்ளது. சிறீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபாலவின் தீர்மானத்தின்கீழ் இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.