வன்முறையில் ஈடுபட்டால் தலையில் சுடுமாறு உத்தரவு-

mahindaநாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின்போது, வாக்களிப்பு நிலையங்களில் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் தலையில் துப்பாக்கிச்சூடு நடத்துமாறு சகல பொலிஸாருக்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவது மிகவும் அவசியமென குறிப்பிட்ட அவர், இவற்றை மீறி செயற்படுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்றால் குறித்த வாக்குச்சாவடியின் வாக்களிப்பு ரத்துச்செய்யப்படும். அசம்பாவிதங்களைத் தடுக்க பொலிஸாருக்கு உச்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, மக்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.மேலும் செய்திகளுக்கு

இந்தோனேசியாவில் இருந்து பயணித்த விமானம் மாயம்-

flightஇந்தோனேசியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பப்புவா அருகே தனது காட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்துள்ளது. பப்புவா மாகாணத்தின் வான்பகுதியில் சென்றபோது விமானம் காணாமல் போனதை தேசிய மீட்புக்குழு உறுதி செய்ததாக ரொய்ட்டரில் செய்தி வெளியாகி உள்ளது. விமானத்தின் சமிக்ஞைகளுக்காக காத்திருக்கும் அதேசமயம், அதனை தேடும் பணியையும் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். ட்ரைகானா விமான நிறுவனத்திற்கு சொந்தமான இந்த பயணிகள் விமானம், ஜெயபுராவின் சென்டானி விமான நிலையத்திற்கும் ஆக்சிபில் பகுதிக்கும் இடையே பயணித்துக் கொண்டிருந்த போதே தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தில் 44 பயணிகள், 5 குழந்தைகள் மற்றும் 5 ஊழியர்கள் இருந்ததாக தேசிய மீட்புக்குழு டுவிட்டரில் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் எயார் ஏசியா பயணிகள் விமானம் 162 பயணிகளுடன் இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூர் சென்றபோது விபத்துக்குள்ளாகி அனைவரும் இறந்தனர். இதையடுத்து, விமான பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது விமானம் காணாமல் போயிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 797பேர் கைது-

election violenceதேர்தல் சட்டங்களை மீறிய 797 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைதானவர்களில் 12 வேட்பாளர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்கான 275 சுற்றிவளைப்புகள் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சுற்றிவளைப்புகள் மூலம் 634 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதுதவிர தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 357 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், இவற்றின்மூலம் 163பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்கள்மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாக்குப் பெட்டிகளை சாவடிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை-

ballot boxபொதுத் தேர்தலின் நிமித்தம் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று காலை 7.30 இற்கு ஆரம்பிக்கப்பட்டதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் தலைமையின் கீழ் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லுதல் மற்றும் கண்காணிப்பு உத்தியோகஸ்தர்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைத்தல் போன்றன இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிடுகின்றார். இதேவேளை, ஒரு இலட்சத்து 25,000 அரச உத்தியோகஸ்தர்கள் இம்முறை தேர்தல் கடமைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் வாக்கெண்ணும் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் 70,000 பேர் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார். இதனிடையே பல வாக்களிப்பு நிலையங்களை ஒன்றிணைத்து வாக்களிப்பு வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் விபத்து: இருவர் பலி, மூவர் படுகாயம்-

555யாழ்ப்பாணம் – மீசாலை – புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 03.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கெக்கிராவை மினிசூறாவளியால் 35 வீடுகள் சேதம், வவுனியாவில் கடும் காற்று-

cycloneஅநுராதபுரம் கெக்கிராவ மற்றும் பலாகம கிராமங்கள் சிலவற்றை ஊடறுத்து வீசிய மினிசூறாவளியினால் சுமார் 35 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இந்த மினிசூறாவளியினால் பாரிய மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தமையினால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் அறிவித்துள்ளது. வவுனியாவின் சில பகுதிகளில் வீசிய கடும் காற்றின் காரணமாக, பல வீடுகள் சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலயம் இதனைத் தெரிவித்துள்ளது. சுமார் 6 வீடுகள் இவ்வாறு சேதமடைந்துள்ளன. இதனால் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பொலனறுவை மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் 150 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரியாலயங்கள் மீது தாக்குதல்-

petrolயாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு வேட்பாளர்களது காரியாலயங்கள் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள தமிரசு கட்சியின் காரியாலயத்தின் மீதும், பருத்தித்துறையில் உள்ள காரியாலயம் ஒன்றின் மீதும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உந்துருளியில் வந்த இருவர் நேற்று இரவு இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னரான சட்டவிரோத பிரசாரங்கள் குறித்து 60க்கும் அதிகமான முறைபாடுகள் கிடைத்திருப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.