தேசிய பட்டியல் உறுப்பினர்களை ஒரு வாரத்தினுள் நியமிக்க அறிவுறுத்தல்-

election.....பொதுத் தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஒரு வாரத்திற்குள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதற்கமைய வெற்றியீட்டிய கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கூறியுள்ளார். இதேவேளை, பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களின் பட்டியல்களை மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிகள் இன்னும் ஓரிரு தினங்களில் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களின் பெயர்கள் தேர்தல் முடிவுகள் அடங்கிய பட்டியல்கள் மற்றும் தேசிய பட்டியல் மூலம் கட்சிகள் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரம் கிடைத்ததும் அதனை வர்த்தமானியில் அறிவிப்பதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

புதிய அரசாங்கத்துக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் வாழ்த்து-

ban ki moonஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி-மூன் புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆட்சிக்கு வந்துள்ள ஐக்கிய தேசிய முன்னணி, நல்லாட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளில் மேலும் முன்னோக்கி செல்வதற்கு வழியமைக்க வேண்டும் என ஐ.நா செயலர் பான் கி-மூன் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை மக்களின் வாக்குரிமையை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். புதிய அரசாங்கத்துடன் இணைந்து சமாதானம் மற்றும் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஐ.நா சபை தயாராக இருப்பதாகவும் பான் கி-மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமைதியான தேர்தல் நடைபெற்றது – ஐரோப்பிய ஒன்றியம்-

european unionநடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அவர்களின் விருப்பப்படி வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாக கடுமையான சட்டத்தை அமுல்படுத்தும் சரியான நிர்வாகம் காணப்பட்டதனால் அமைதியான தேர்தலை ஒன்றை நடத்த முடிந்ததாக தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவின் தலைவர் கிரிஸ்டியன் பெரேடா தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளர் மற்றும் தன்னுடன் வருகை தந்திருந்த குழுவினரும் வெளிப்படைத்தன்மையுடனும் பாரபட்சமற்ற முறையிலும் நடந்துகொண்டதாக அவர் தெரிவித்தார். விஷேடமாக சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.