ஒன்றாக முன்னோக்கி செல்ல ரணில் அழைப்பு-

ranilஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். ரணில் விக்ரமசிங்க தமது பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவுடன் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரசன்னமாகியிருந்தார். இதன்போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாவது, ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற புரட்சியை உறுதிப்படுத்தும் வகையிலான மக்கள் ஆணையே இந்த பாராளுமன்ற தேர்தலின் மூலம் கிடைத்துள்ளது. அதன் பிரகாரம், அடுத்த அரசாங்கத்தின் பிரதமராக பொறுப்புகளை ஏற்று நான் செயற்படவுள்ளேன். இணக்கப்பாட்டுடன் முன்னோக்கி செல்வதற்காகவும் தேசிய செயற்பாட்டிற்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து, அந்த பொறுப்புகளுடன் அல்லது பாராளுமன்றத்தில் புதிதாக ஏற்படுத்தப்படுகின்ற பொறுப்புகளோடு இணைந்து, அதன்மூலம் மாற்று வழிகளை ஆராய்ந்து ஒன்றாக முன்னோக்கி செல்வதற்கு அனைத்து கட்சிகளுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டு மக்களின் பிரச்சினையை அவதானித்து, அப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நாடாளுமன்றில் அனைவரையும் இணைத்து கொள்ளவேண்டும். அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகப்போவதில்லை என ரணில் விக்கிரமசிங்க இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது கூறியுள்ளார்.

அண்மைக்கால வரலாற்றில் சிறந்த தேர்தல்-பவ்ரல்-

paffrelபவ்ரல் அமைப்பு விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராய்ச்சி, அண்மைக்கால வரலாற்றில் தாம் அவதானித்த சிறந்த தேர்தல் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் என்பதை எவ்வித விவாதங்களும் இன்றி ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார். எனினும், கடந்த பல தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலில் குறைவான வன்முறைச் சம்பவங்களே பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிசெய்யும் வகையில், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மாஅதிபர் தலைமையிலான பொலிஸ் திணைக்களம் செயற்பட்டதாகவும் தெரிவித்தார். இடமாற்றம் வழங்கப்படும் விடயத்தில் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தை நடைமுறைப்படுத்திய விதம் சிறப்பானது என பாராட்டிய ரோஹன ஹெட்டிஆராய்ச்சி, அனைத்து விடயங்களையும் கருத்திற்கொள்ளும் போது இத் தேர்தலை மிகவும் சிறப்பான தேர்தலாகவே தாம் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.